

மதுரை: இந்தியாவின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு சர்வதேச அளவில் முன்மாதிரியாக மாறியுள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.
இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் முக்கிய பிரிவான ‘யங் இந்தியன்ஸ்’ அமைப்பு சார்பில் மதுரையில் தேசிய நிதி தொழில்முனைவோர் 2 நாள் உச்சி மாநாடு ‘எல்லைகளைத் தாண்டிய தொழில்முனைவு’ என்ற தலைப்பில் நேற்று முன்தினம் தொடங்கியது.
நிறைவு நாளான நேற்று நடந்த அமர்வுக்கு யங் இந்தியன்ஸ் அமைப்பின் தேசியத் தலைவர் அருண் ரத்தோட் தலைமை வகித்தார். சிஐஐ தென் மண்டலத் தலைவர் பி.ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். சிஐஐ டைரக்டர் ஜெனரல் சந்திரஜித் பானர்ஜி வரவேற்றார்.
இம்மாநாட்டில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: மதுரை 2,500 ஆண்டுகள் தொன்மையான நகரம். இந்நகரம் தொழில், வணிகத்துக்காக தொடர்ந்து இயங்கியதால்தான் தூங்கா நகரம் என்று அழைத்துள்ளனர். மதுரையின் வரலாற்றை கூறும் கங்காதேவியின் புகழ்பெற்ற ‘மதுரா விஜயம்’ நூலில் மதுரை எதிர்கொண்ட படையெடுப்புகள், அழிவுகள் ஆகியவற்றிலிருந்து எப்படி வீரியத்துடன் மீண்டெழுந்தது என்பது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியால் உள்ளங்கையில் உலகம் சாத்தியமாகியுள்ளது. தற்போதைய இளம் தொழில்முனைவோர் தடைகளை கடந்து முயற்சியால் முன்னேற முடியும். பின்தங்கிய மாவட்டங்களை மேம்படுத்தும் லட்சிய மாவட்டங்கள் திட்டம் விருதுநகர், ராமநாதபுரத்தில் செயல்படுத்தப்படுகிறது. விருதுநகரில் மிளகாய் வத்தல் வணிகத்தை உலகளாவிய சந்தைக்கு கொண்டு செல்லும் வகையில் நிறுவனத்தை தொடங்கவுள்ளோம். மேலும் விவசாயிகள் மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி போன்ற பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டு உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தொடங்கியுள்ளனர்.
ரஷ்யா- உக்ரைன் போர், இஸ்ரேல்- ஈரான் இடையே பதற்றம், சரக்குக் கப்பல்கள் சரியான நேரத்தில் வராதது, எண்ணெய் மற்றும் எரிவாயு சிக்கல்கள், உரங்களின் விலை உயர்வு போன்ற பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் இந்தியா மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக உள்ளது. இந்தியாவின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு சர்வதேச அளவில் ஒரு முன்மாதிரியாக மாறியுள்ளது. யுபிஐ தளத்தில் மாதம் 20 பில்லியனுக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் நடக்கின்றன. இந்தியாவில் தற்போது 2,100 உலகளாவிய திறன் மையங்கள் உள்ளன.
அவசர கால கடன் உத்தரவாதத் திட்டம் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு அரசு தொடர் ஆதரவை வழங்கி வருகிறது. இந்த வாய்ப்புகளை புதிய தொழில்முனைவோர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தற்போது இந்தியா உலக அரங்கில் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாகஉயர்ந்துள்ளது. பிரான்சில் நடைபெறும் சர்வதேச ‘ஐடிஇஆர்’ எனும் அணுக்கரு இணைவு ஆராய்ச்சி திட்டத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது.
ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிகா துருவப் பகுதிகளிலும் இந்தியா ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. நிலவின் தென்துருவத்தில் ஆராய்ச்சிமேற்கொண்டதன் மூலம் இந் தியா முத்திரை பதித்துள்ளது. தைரியமாகவும், பொறுப்புடனும் புதிய தொழில்களை உருவாக்குங்கள். 2047-க்குள் வளர்ந்த இந்தியா என்னும் இலக்கை நோக்கி ஒன்றிணைந்து பயணிப்போம். இவ்வாறு பேசினார்.
இந்த மாநாட்டில் நாடு முழுவதுமிருந்து 71 ‘யங் இந்தியன்ஸ்’ கிளைகளைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், தொழில் வல்லுநர்கள் பங்கேற்றனர். யங் இந்தியன்ஸ் நிர்வாகி அனுஜ்அகர்வால் நன்றி கூறினார்.