‘சிங்கப்பெண்’ படைக்கான போலீஸார் எண்ணிக்கை அதிகரிப்பு

மாவட்டந்தோறும் கூடுதலாக 12 பேர் தேர்வு
‘சிங்கப்பெண்’ படைக்கான போலீஸார் எண்ணிக்கை அதிகரிப்பு
Updated on
1 min read

மதுரை: ‘சிங்கப்பெண்’ படைக்கான போலீஸார் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது. இதற்காக மாவட்டந்தோறும் கூடுதலாக 12 பேருக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் முதல்வராக விஜய் பதவி ஏற்ற பின் ஜூன் 9 முதல் ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ தொடங் கப்பட்டது. இதற்காக முதல் கட்டமாக ரூ.354 கோடி நிதி ஒதுக்கி 2,500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டன.

எதிர்காலத்தில் இப்படைக்கென புதிதாக ஆட்கள் தேர்வு செய்யப்படுவர் என கூறப்பட்டுள்ளது. அதுவரை தமிழக காவல்துறையில் தற்போது பணியில் உள்ளவர் களையே தற்காலிகமாகத் தேர்ந்தெடுத்து இப்படை உருவாக்கப்பட்டது.

ஒவ்வொரு மாவட்டம், மாநகராட்சி பகுதியில் எஸ்பி, துணை ஆணையர்கள் மேற் பார்வையில் 30 வயதுக்கு உட்பட்ட 4 எஸ்ஐகள், 8 பெண் காவலர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் சுழற்சி முறையில் ரோந்து பாதுகாப்பில் ஈடுபடுகின்றனர். இவர்கள் பள்ளி, கல்லுாரிகள், அதிக மாக பெண்கள் பணிபுரியும் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிங்கப் பெண் படை குறித்து விழிப் புணர்வு ஏற்படுத்துகின்றனர்.

1091 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் இருந்தும், காவல் கட்டுப்பாட்டு அறை மூலம் கிடைக்கும் தகவல் அடிப்படையிலும் சம்பவ இடத்துக்குச் சென்று குற்றத்தடுப்புச் செயல்களில் ஈடுபடுகின்றனர். பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருக்கும் பெண் குழந்தைகள் மற்றும் இடைநிற்றலைக் கண்டறிந்து அவர்களின் பெற்றோருக்கு கவுன்சலிங் கொடுத்து பள்ளிக்கு அனுப்பும் முயற்சியையும் மேற்கொள்கின்றனர்.

இந்நிலையில் சிங்கப்பெண் படையினரின் சில சிரமங்களைக் கருத்தில் கொண்டுஎண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்தந்த மாநகர, மாவட்ட காவல்துறை சார்பில் கூடுதலாக தலா 4 எஸ்ஐகள், 8 பெண் காவலர்களைத் தேர்வு செய்து சென்னைக்கு பயிற்சிக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இதன்மூலம் பெண்களுக்கு எதிரான குற்றங்களை மேலும் துரிதமாக தடுக்கலாம் என, போலீஸார் நம்புகின்றனர்.

போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், தவெக ஆட்சி அமைந்த பிறகு பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க ஒவ்வொரு எஸ்பியின் மேற்பார்வையில் தலா 4 எஸ்ஐகள், 8 காவலர்கள் தற்போது இரவு, பகல் என சுழற்சி முறையில் பணியில் உள்ளனர்.

மேலும், கூடுதலாக 4 எஸ்ஐகள், 8 காவலர்களுக்குப் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிங்கப்பெண் அதிரடிப் படையினர் தடையின்றி ரோந்து பணியில் ஈடுபட முடியும், என்றனர்.

‘சிங்கப்பெண்’ படைக்கான போலீஸார் எண்ணிக்கை அதிகரிப்பு
வழிபாட்டுத் தலங்களில் யாருக்கும் பாகுபாடு காட்ட இடமில்லை: சென்னை உயர் நீதிமன்றம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in