வழிபாட்டுத் தலங்களில் யாருக்கும் பாகுபாடு காட்ட இடமில்லை: சென்னை உயர் நீதிமன்றம்

வழிபாட்டுத் தலங்களில் யாருக்கும் பாகுபாடு காட்ட இடமில்லை: சென்னை உயர் நீதிமன்றம்
Updated on
1 min read

சென்னை: இறைவன் முன் அனைத்து உயிர்களும் சமம் என்பதால், வழிபாட்டுத் தலங்களில் யாருக்கும் பாகுபாடு காட்ட இடமில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள மணவாள மாமுனிகள் சன்னதியில், பிராமணர் அல்லாத தென்கலை வைணவ பக்தர்களுக்குத் தீர்த்தம், பிரசாதம் வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதாக மாதவன் ராமானுஜ தாசன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

மேலும் அந்த மனுவில், பிராமணர் அல்லாத பக்தர்கள் வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள மணவாள மாமுனிகள் சன்னதியில் பிரதான வாசல் வழியாக அனுமதிக்கப்படாமல் பக்கவாட்டு வாசல் வழியே அனுப்பப்படுவதாகவும், நாலாயிர திவ்யப் பிரபந்தம் பாட அனுமதி மறுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன் மற்றும் இ.மனோகரன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கோயில் நிர்வாகம் தரப்பில், ஆழ்வார்கள் மற்றும் ஆச்சாரியார்கள் சன்னதிகள் மிகக் குறுகிய இடவசதி கொண்டதாக இருப்பதாலும், சேவா கால நேரங்களில் பணியில் இருக்கும் முறைதாரர்களே உள்ளே முழுமையாக நிற்க முடியாத சூழல் நிலவுவதாலும் பொதுப் பக்தர்கள் சன்னதிக்கு வெளியே நிறுத்தப்படுகிறார்களே தவிர, இதில் எந்தவித சாதிப் பாகுபாடும் இல்லை எனவும் விளக்கமளிக்கப்பட்டது.

குறிப்பிட்ட காலங்களை தவிர்த்து மற்ற நேரங்களில் பொது பக்தர்கள் சன்னதிகளில் திவ்யப் பிரபந்தம் பாடி இறைவனை வழிபட எந்தத் தடையும் இல்லை எனவும், திருக்கோயிலில் தீர்த்தம், பிரசாதம் வழங்குவதில் அனைத்துப் பக்தர்களும் சமமாக நடத்தப்படுவார்கள், எவ்விதப் பாகுபாடும் காட்டப்படாது என நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

இந்த உத்தரவாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இறைவனின் பார்வையில் அனைத்து உயிர்களும் சமமானவர்கள், இறைவன் யாரிடமும் பாகுபாடு காட்டுவதில்லை என்ற பகவத் கீதையின் வாசகத்தை சுட்டிக்காட்டி வழிபாட்டுத் தலங்களில் யாருக்கும் பாகுபாடு காட்ட இடமில்லை என திட்டவட்டமாக தெரிவித்தனர்.

மேலும், கோயில் நிர்வாகம் அளித்த உத்தரவாதத்தை உறுதியாக பின்பற்றி செயல்பட உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

வழிபாட்டுத் தலங்களில் யாருக்கும் பாகுபாடு காட்ட இடமில்லை: சென்னை உயர் நீதிமன்றம்
“எம்எல்ஏக்கள் அனைவருக்கும் அரசு சார்பில் வாகனம்” - பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in