

சென்னை: வரி ஏய்ப்பு புகாரைத் தொடர்ந்து சென்னையில் தனியார் நிறுவனம் தொடர்புடைய 5 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் தனியாருக்கு சொந்தமான கணிணி தொழில்நுட்ப நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கணிணி உதிரி பாகங்கள் விற்பனை மற்றும் தொழில்நுட்பச் சேவைகளை வழங்கி வரும் இந்த நிறுவனம், வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் இந்தியாவின் பல்வேறு சிறிய நிறுவனங்களுடன் நிதிப் பரிமாற்றங்களை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிதிப் பரிமாற்றங்களில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், வருவாயை முறையாகக் கணக்கில் காட்டாமல் வரி ஏய்ப்பு செய்திருப்பதாகவும் வருமான வரித்துறைக்கு ரகசியப் புகார்கள் வந்தன.
இந்தப் புகார்களைத் தொடர்ந்து, வருமான வரித்துறை அதிகாரிகள் அந்த நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கைகளைக் கண்காணித்து வந்தனர்.
அதில் வரி ஏய்ப்பு நடந்ததற்கான முதற்கட்ட ஆதாரங்கள் கிடைத்ததையடுத்து, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அந்நிறுவனத்துக்குத் தொடர்புடைய 5 இடங்களில் நேற்று ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது.
குறிப்பாக, ஆழ்வார்பேட்டை, எர்ணாவூர், விருகம்பாக்கம், ராஜமங்கலம் உள்ளிட்ட இடங்களில் இந்தச் சோதனைகள் நடைபெற்றன. துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.
முக்கியத் தரவுகள் ஆய்வு
சோதனையின் போது, நிறுவனத்தின் கணினி பதிவுகள், வங்கிப் பரிமாற்ற ஆவணங்கள் மற்றும் நிதித் தொடர்பான முக்கியத் தரவுகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
கணக்கில் வராத நிதிப் பரிமாற்றங்கள் மற்றும் வரி செலுத்தாமல் மறைக்கப்பட்ட வருவாய் குறித்த விவரங்களைச் சேகரிப்பதில் அதிகாரிகள் தீவிரம் காட்டினர்.
சோதனையின் முடிவில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள், ரொக்கப் பணம் மற்றும் இதர சொத்துக்கள் குறித்த முழுமையான விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.