

சென்னை: ஜப்பானில் நடைபெற்று வரும் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர் ஜெஹான் டொரப் மதன் மற்றும் வீராங்கனை பேபி சஹானா ரவி ஆகியோருக்கு தலா ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: ஜப்பானில் நடைபெற்று வரும் 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் டேபிள் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் கிளாஸ் 1 பிரிவில் ஜெஹான் டொரப் மதன் மற்றும் பெண்கள் கிளாஸ் 9 பிரிவில் பேபி சஹானா ரவி ஆகியோர் வெண்கலப் பதக்கங்களை வென்று தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள். இவர்களது சாதனையை அங்கீகரிக்கும் வகையில், தமிழக அரசு சார்பில் தலா ரூ.30 லட்சம் உயரிய ஊக்கத்தொகை இருவருக்கும் வழங்கப்படும்.
தமிழகத்தைச் சேர்ந்த இளம் பாரா விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தையும், உத்வேகத்தையும் அளிக்கும் வகையில் இவர்களின் வெற்றி அமைந்துள்ளது.
உலக ஸ்கேட்டிங் போட்டி
இதேபோல், பாராகுவே நாட்டின் அசுன்சியோன் நகரில் நடைபெற்ற உலக ஸ்கேட்டிங் போட்டிகள் 2026 தொடரின் மாரத்தான் பிரிவில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்த தமிழக ஸ்கேட்டிங் வீரர் ஆனந்த்குமாருக்கும், ஜூனியர் பெண்களுக்கான 3000 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைகள் லட்சிதா, பிரகதி மற்றும் ருத்வ ஆகியோருக்கும் எனது வாழ்த்துகள்.
ஆனந்த்குமார் இந்த தொடரில் ஏற்கெனவே 500 மீட்டரில் வெண்கலமும், 1000 மீட்டரில் வெள்ளியும் வென்றுள்ள நிலையில், தற்போது மூன்றாவதாக தங்கப் பதக்கத்தையும் கைப்பற்றி அசத்தியுள்ளார்.
இச்சாதனைகள் விளையாட்டுத் துறையில் சாதனை படைக்கத் துடிக்கும் இளைய தலைமுறையினருக்கு புதிய ஊக்கத்தையும், உத்வேகத்தையும் அளிக்கும். பதக்கங்களை வென்ற வீரர், வீராங்கனைகள் மேலும் பல உயரங்களை எட்ட வாழ்த்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.