

சென்னை: சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராமதாஸின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.
சேலம் மாவட்டம் பள்ளப்பட்டியில் கடந்த 12-ம் தேதி இரவு சேலம் மேற்கு தொகுதி வேட்பாளர் இரா.அருளை ஆதரித்து பாமக நிறுவனர் ராமதாஸ் பிரச்சாரம் செய்தார்.
அப்போது திடீரென்று மயக்கமடைந்த ராமதாஸை, அங்கிருந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று முன்தினம் அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவர்கள் பலகட்ட பரிசோதனைகளைச் செய்து, தேவையான சிகிச்சைகளை அளித்தனர். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.
மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ள அவரை குடும்பத்தினர் உடனிருந்து கவனித்து வருகின்றனர். மேலும் சில பரிசோதனைகளை மேற்கொள்ள மருத்துவர்கள் முடிவு செய்தனர்.