

தமிழ்ப் புத்தாண்டு தினத்தையொட்டி, சென்னை வடபழனி முருகன் கோயிலில் சுவாமியை தரிசிக்க நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள். | படங்கள்: ம.பிரபு |
சென்னை: தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.
சித்திரை மாதப் பிறப்பான நேற்று, தமிழ் புத்தாண்டு தமிழகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. சென்னையின் முக்கிய கோயில்களில் சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் மற்றும் பஞ்சாங்கம் வாசித்தல் என ஆன்மிக நிகழ்வுகள் களைகட்டின.
வடபழனி முருகன் கோயிலில், அதிகாலை 4 மணிக்கே நடை திறக்கப்பட்டு, பள்ளியறை பூஜையுடன் வழிபாடுகள் தொடங்கின. மூலவர் முருகப்பெருமான் காலையில் தங்க நாணயக் கவசம் மற்றும் தங்கவேலுடன் ஜொலித்தார்.
உச்சிக்கால பூஜையில்ராஜ அலங்காரமும், மாலையில் புஷ்ப அங்கியும் சாத்தப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 10 மணி வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோயிலில், அஷ்டலட்சுமி சந்நிதிகளில் சிறப்பு திருமஞ்சனம் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. காலை மற்றும் மாலை வேளை
களில் திரளான பக்தர்கள் வருகை தந்து அன்னை அஷ்டலட்சுமியை வழிபட்டனர்.
‘வடசபரி’ என்று அழைக்கப்படும் ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோயிலில் விஷு கனி தரிசனம் கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. கோயில் முழுவதும் வண்ணமயமான பழங்கள் மற்றும் காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. புத்தாண்டை முன்னிட்டு 18-ம் படி திறக்கப்பட்டு, நெய் அபிஷேகம் நடைபெற்றது.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள், மயிலை கபாலீஸ்வரர், தியாகராய நகர் வெங்கடேஸ்வர பெருமாள் மற்றும் பத்மாவதி தாயார் கோயில்களில் சிறப்புப் பூஜைகள் நடந்தன.
அதேபோல் திருவான்மியூர் மருந்தீஸ்வரர், மாங்காடு காமாட்சி அம்மன், குன்றத்தூர் முருகன் கோயில், சிறுவாபுரி முருகன் கோயில் என சென்னை மற்றும் புறநகரின் அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
வெயிலின் தாக்கத்தைக் குறைக்க ஆங்காங்கே பந்தல்கள் அமைக்கப்பட்டு, பானகம், நீர் மோர் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பல கோயில்களில் புத்தாண்டுப் பலன்களைத் தெரிந்துகொள்ள பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்வும், தேர்ப்பவனியும் நடைபெற்றன.
கோயில்கள் மட்டுமின்றி வீடுகளிலும் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது. பூஜை அறையில் கண்ணாடி, நவதானியங்கள், பழங்கள் மற்றும் ஆபரணங்களை வைத்து ‘சித்திரை கனி காணும்’ நிகழ்வை மக்கள் கடைபிடித்தனர்.
இறைவனுக்குப் படையலிட்டு வணங்கிய பின், பெரியவர்களின் பாதங்களைத் தொட்டு ஆசி பெற்று தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.