

பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரன் மணிமண்டபம்.
ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வரும் 17-ம் தேதி இமானுவேல் சேகரன் மணிமண்டபத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
பரமக்குடியில் நகராட்சி சந்தை வளாகத்தில் இமானுவேல் சேகரன் பிறந்த நாள் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு ரூ.3 கோடி மதிப்பில் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்க 11.9.2023-ல் தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும், இமானுவேல் சேகரனின் பிறந்த நாள் ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. நகராட்சிக்கு சொந்தமான சந்தை வளாகப் பகுதியில் மணிமண்டபம் கட்டுமானப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.
இந்நிலையில், வரும் 17-ம் தேதி மதுரை அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அன்று பரமக்குடியில் இமானுவேல் சேகரனின் மணிமண்டபத்தை திறந்து வைக்க உள்ளார்.
இதுகுறி்த்து அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறும்போது, “பரமக்குடியில் இமானுவேல் சேகரனுக்கு உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அதைத் திறப்பதற்காக வரும் 17-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பரமக்குடி வருகிறார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன” என்றார்.