

மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக் கூட்டத்துக்கு அனுமதிகோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு கொடுக்க வந்த அதிமுக, பாஜக நிர்வாகிகள்.
மதுரை: மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கும் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி கோரி அதிமுக, பாஜகவினர் இணைந்து, மதுரை மாநகரக காவல் ஆணையரிடம் மனு அளித்தனர்.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மதுரையில் வரும் 23-ம் தேதி தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், பாமக தலைவர் அன்புமணி மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
இந்தப் பொதுக் கூட்டத்தை மதுரை பாண்டிகோயில் அருகே முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்ற அம்மா திடலில் நடத்தத் திட்டமிட்டுள்ளனர். இதற்கு அனுமதி கோரி பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் ராம. சீனிவாசன், மாவட்டத் தலைவர்கள் மாரி சக்கரவர்த்தி, ராஜசிம்மன் ஆகியோர் மதுரை மாநகர காவல் ஆணையரிடம் நேற்று மனு அளித்தனர்.
அப்போது, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், அதிமுக எம்எல்ஏ-க்கள் ராஜன் செல்லப்பா, பெரியபுள்ளான், அதிமுக ஐ.டி. பிரிவுத் தலைவர் ராஜ்சத்யன், டாக்டர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
பின்னர் ராம. சீனிவாசன் கூறும்போது, “மதுரையில் வரும் 23-ம் தேதி பாஜக பிரச்சாரப் பொதுக் கூட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். உள்துறை அமைச்சர் அமித்ஷா வரவில்லை. பொதுக் கூட்டத்தில் அதிமுக உட்பட அனைத்து கூட்டணிக் கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கின்றனர். பொதுக் கூட்டத்துக்கான ஏற்பாடுகளை பாஜகவும், அதிமுகவும் இணைந்து செய்து வருகின்றன” என்றார்.
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறும்போது, “வரும் தேர்தலில் ஆட்சி மாற்றம் நிகழ்வது உறுதி. மற்றொரு சித்திரைத் திருவிழாபோல பிரதமர் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்துக்கு அதிமுக சார்பில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நிர்வாகிகளுக்கு பழனிசாமி ஆலோசனை வழங்கி உள்ளார்” என்றார்.