‘மேகமலை மக்களின் வாழ்வுரிமையை பாதுகாப்பீர்’ - அரசுக்கு ஐஜேகே வலியுறுத்தல்

‘மேகமலை மக்களின் வாழ்வுரிமையை பாதுகாப்பீர்’ - அரசுக்கு ஐஜேகே வலியுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: “மேகமலை மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று இந்திய ஜனநாயகக் கட்சி (ஐஜேகே) தலைவர் ரவி பச்சமுத்து வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில், “தேனி மாவட்டம் மேகமலை பகுதியில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழல் கவலையளிக்கிறது. சுமார் 5 ஆயிரம் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், தமிழக அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட வேண்டும்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்வதுடன், அப்பகுதி மக்களை அவசரமாக வெளியேற்றும் நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும். பல ஆண்டுகளாக வசித்து வரும் மக்களின் குடியிருப்பு உரிமை, விவசாய வாழ்வாதாரம் மற்றும் சட்டப்பூர்வ உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். மேகமலை மக்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு அலட்சியப்படுத்தக் கூடாது.

மக்களின் முக்கிய கோரிக்கைகளான வெளியேற்ற நடவடிக்கையை கைவிடுதல், தகுதியானவர்களுக்கு பட்டா வழங்குதல், விவசாயம் மற்றும் வாழ்வாதாரத்தை பாதுகாத்தல், குடிநீர், சாலை வசதி, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உறுதி செய்தல் ஆகியவற்றை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். சுற்றுச்சூழலையும், வனத்தை பாதுகாப்பதும் அவசியம்.

அதே நேரத்தில் பல தலைமுறைகளாக இயற்கையோடு இணைந்து வாழும் மக்களின் வாழ்வுரிமையை பாதுகாப்பதும் அரசின் கடமை. எனவே, சுற்றுச்சூழல், வனப்பகுதி பாதுகாப்புக்கும் மக்கள் வாழ்வுரிமைக்கும் சமநிலையை ஏற்படுத்தும் வகையில் நிரந்தரத் தீர்வை தமிழக அரசு உடனடியாக உருவாக்க வேண்டும்” என்று ரவி பச்சமுத்து தெரிவித்துள்ளார்.

‘மேகமலை மக்களின் வாழ்வுரிமையை பாதுகாப்பீர்’ - அரசுக்கு ஐஜேகே வலியுறுத்தல்
நெல் மூட்டைகள் நனைவதை தடுக்க நிரந்தர கிடங்குகளை விரைந்து அமைக்க அன்புமணி வலியுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in