

சென்னை: குதிரை பேரம் உண்மையாய் இருந்தால் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை அசோக் நகரில் உள்ள விசிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுகவை முழுமையாக கைப்பற்றுவோம், 90 சதவீதம் நிர்வாகிகள் எங்கள் பக்கம் வர போகிறார்கள் என ஆதவ் அர்ஜுனா பேசியதற்கு இதுவரையில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி எதுவுமே சொல்லவில்லை.
குதிரை பேரம் உண்மையாய் இருந்தால் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளுநருக்கு அந்த அதிகாரம் இருந்தால் அவர் அதில் உடனடியாக தலையிட வேண்டும். இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஒரே தேசம் ஒரே தேர்தல் என்கிற நிலையை அடைய, அதற்கான சட்டத்தைக் கொண்டுவர முயற்சிப்பதாக தெரிகிறது.
ஏற்கெனவே அதனை தொகுதி மறுவரையறை மசோதா என்கிற பெயரில் கொண்டு வந்தபோது திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இருந்து அதனை முறியடித்தோம். இப்போதும் அந்த முயற்சியை நாங்கள் மேற்கொள்வோம்.
ஆனால், மேற்கு வங்கத்திலே திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20 பேரை அந்த கட்சியிலிருந்து வெளியேற்றி அரசியல் சூதாட்டம் ஆடுகிற நிலையைபார்க்கிறோம்.
நாடாளுமன்றத்துக்கு சென்றால்தான் இதுகுறித்து என்ன நிலை என்பது தெரியவரும் என்றாலும், நாங்கள் இந்த முறையும் அந்த முயற்சியைமுறியடிப்பதற்கு எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வோம்.
அதிமுகவில் இருந்து ஆட்களை வெளியேற்ற முயற்சி நடக்கிறது, குதிரை பேரம் நடக்கிறது என்கிற விவாதம் ஒருபுறம்இருக்கிறது என்றாலும் கூட, அதிமுகவுக்குள் என்ன நடக்கிறது என்பது பற்றி அதிமுக தலைவர்கள் ஏன் வாய் திறக்காமல் இருக்கிறார்கள்.
ஆவேசப்பட வேண்டியவர்கள், ஆத்திரப்பட வேண்டியவர்கள், தவெகவுக்கு எதிராக கொந்தளிக்க வேண்டியவர்கள் அமைதிகாப்பதன் பொருள் என்ன, ஆளுநரிடம் சென்று மனு கொடுப்பதை ஒரு கடமையாக செய்கிறார்களே தவிர, இதை ஒரு வெகுமக்கள் கருத்தாக மாற்றுவதற்கு அவர்கள் எந்த முயற்சியும் எடுத்ததாக தெரியவில்லை.
`எங்கள் கட்சியை சீர்குலைக்க பார்க்கிறார்கள், இதை அனுமதிக்க மாட்டோம்' என்ற குரலும் எழவில்லை. இதுகுறித்து பொதுமக்களிடத்தில் முறையீடும் செய்யவில்லை. குதிரை பேரம் நடைபெறுகிறது என்றால் அது குறித்து தவெக அல்லது அதிமுக தலைமையிடம் கேட்க வேண்டும். திமுக ஈடுபடுகிறது என்றால் திமுக தலைமையிடம்
கேட்க வேண்டும். ஆனால் அவர்களிடம் எந்தக் கேள்வியும் எழுப்பாமல், இதிலே திருமாவளவன் என்ன சொல்லுகிறார், அவர் ஏன் மழுப்புகிறார் என்று திரிபுவாதம் செய்வது அர்த்தமில்லாதது. இவ்வாறு அவர் கூறினார்.