

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
இண்டியா கூட்டணியில் வலுவாக இருப்பது முதல்வர் மு.க.ஸ்டாலின் தான். அவர் வெளியேறிவிட்டால் இண்டியா கூட்டணி என்பது வெறும் எழுத்தில் தான் இருக்கும் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
திருச்சியை அடுத்த ஆலம்பட்டி புதூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் வரும் 21-ம் தேதி மாநாடு நடைபெறுகிறது. அதற்காக அங்கு நடைபெறும் ஏற்பாடுகளை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாங்கள் தேர்தல் அறிக்கை வெளியிட மாட்டோம். எங்கள் ஆட்சி எப்படி இருக்கும் என்பதற்கான செயல்முறையைத் தான் வெளியிடுவோம். மாநாட்டில் 234 தொகுதி வேட்பாளர்களையும் அறிமுகம் செய்ய உள்ளேன். இந்தத் தேர்தலில் நானும் போட்டியிடுவேன். இடைக்கால பட்ஜெட் பற்றாக்குறை பட்ஜெட் ஆக உள்ளது. இந்த ஆட்சி முறையை நாங்கள் எதிர்க்கிறோம்.
தமிழகத்தின் வளர்ச்சி என்பது கடன் வளர்ச்சியாக உள்ளது. தமிழக அரசு வாங்கிய கடனுக்கு வட்டியாக ஒரு லட்சம் கோடிக்கு மேல் கட்டிக்கொண்டு இருக்கிறோம். இலவசங்கள் எனக் கூறிவிட்டு, மின் கட்டணம், சொத்து வரி போன்றவற்றை உயர்த்துகிறார்கள். தொடர்ச்சியாக கடன் வாங்கிக் கொண்டிருக்கும்போது நாடு பொருளாதார அடிமையாக மாறிவிடும்.
இண்டியா கூட்டணியில் ஏதோ பிரச்சினை இருப்பதால்தான், அவர்கள் நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம் எனக் கூறிக் கொண்டு இருக்கிறார்கள். அந்தக் கூட்டணியில் வலுவான தலைவராக இருப்பது ஸ்டாலின் தான். அவர் வெளியேறி விட்டால் இண்டியா கூட்டணி என்பது வெறும் எழுத்தில் தான் இருக்கும். அதனால் தான் மணிசங்கர் ஐயர் ஸ்டாலினை தலைமை தாங்க அழைக்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தவெக தலைவர் விஜய், மக்கள் சந்திப்பு பயணத்தை தற்போது நிர்வாகிகள் சந்திப்பு பயணம் என்று மாற்றி உள்ளதை எப்படிப் பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு, “தம்பியை (விஜய்) குறை சொல்வது என் வேலையில்லை. என்னுடைய வேலையை நான் செய்து கொண்டிருக்கிறேன். அதை நீங்கள் என் தம்பியிடம் தான் கேட்க வேண்டும்’’ என்றார்.