

தேர்தலில் யார் தேவையான செலவுகளை செய்யக்கூடியவர்கள் என்பதை பார்த்துத்தான் வேட்பாளர்களை முடிவு செய்ய முடியும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரை அடுத்த திருபுவனத்தில் மதிமுக சார்பில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வைகோ பேசியதாவது: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நமக்கு அக்னிப் பரிட்சை. இந்தத் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள், யார் தேவையான செலவுகளைச் செய்யக்கூடியவர்கள் என்பதையெல்லாம் பார்த்துதான் வேட்பாளர்களை முடிவு செய்ய முடியும். எனவே, ஒவ்வொருவரும் நான்தான் வேட்பாளராக வரவேண்டும் என்ற எண்ணம் இருந்தால், முதலில் அதை தூக்கி எறியுங்கள்.
நமக்கு எத்தனை தொகுதி வழங்குவார்கள் என்பதும் தெரியாது. தேர்தல் நிதி வசூலிப்பது எவ்வளவு சிரமம் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். முன்பு திமுக-வுக்கு நான் தேர்தல் நிதி திரட்டியபோது பட்ட சிரமம் எனக்கு நன்றாகவே தெரியும். இப்போது மற்ற கட்சிகளிடம் ஏராளமான நிதி இருக்கிறது. ஆனால், மதிமுக-விடம் அப்படி ஒரு நிலை இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.
வைகோ மேடையில் பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென மைக் ஸ்டாண்ட் மூலம் ‘ஷாக்’ அடித்ததால் அவர் சற்றே தடுமாறினார். இதனால், மேடையில் இருந்த அனைவரும் பதற்றத்தில் எழுந்தனர். சுதாரித்துக்கொண்ட வைகோ, “மின்சாரம் தாக்க முற்படுகிறது” என்றார்.