

விருதுநகர்: “அதிமுகவை சின்னாபின்னமாக்கி வைத்துள்ளார் பழனிசாமி. ஒரு கட்சியை எப்படி அழிக்க முடியும் என்று யாராவது முனைவர் பட்டம் பெற ஆய்வு செய்தால், அதில் பழனிசாமிதான் முக்கிய கதாபாத்திரமாக இருப்பார்” என்று தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம்தாகூர் எம்.பி. கூறினார்.
விருதுநகரில் உள்ள காமராஜர் இல்லத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், உயர் கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் ஆகியோர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து இன்று மரியாதை செலுத்தினர். அதைத் தொடர்ந்து, நகராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற நிகழ்ச்சியில், லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் என்ற பிரச்சாரத்தை தொடங்கிவைத்தனர்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் மாணிக்கம் தாகூர் கூறும்போது, “தமிழக காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பிறகு காமராஜர் இல்லத்துக்கு முதல் முறையாக வந்து மரியாதை செலுத்தியுள்ளோம். உயர் கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் 2-வது முறையாக வந்து காமராஜர் இல்லத்தில் மரியாதை செலுத்தியுள்ளார். நானும் ஒவ்வொரு முறையும் காமராஜர் இல்லத்துக்கு வந்து சென்ற பிறகு பொறுப்புகள் கூடிக்கொண்டே செல்கிறது. மற்ற அரசியல் கட்சியினருக்கும் நாள் சொல்ல விரும்புவது, காமராஜர் இல்லத்துக்கு வந்து சென்றால் உங்கள் பொறுப்புகளும் உயரும்.
நான் ஏற்றுள்ள பொறுப்பு, பெரிய பொறுப்பு. காமராஜர் உள்ளிட்டோர் இருந்த பெரும் பொறுப்பு. சாதாரண தொண்டனாக சிவகங்கையில் பிறந்த எனக்கு இவ்வளவு பெரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர் என்ற பிரச்சாரத்தையும் இன்று தொடங்கியுள்ளோம். எங்கள் கரங்கள் என்றும் கரைபடியாத கரங்கள். இதை மக்கள் இயக்கமாக மாற்றுவோம். தொடர்ந்து அரசு அலுவலகங்கள் முன்பும் கையெழுத்து இயக்கத்தை நடத்த உள்ளோம். இது காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரம் மட்டுமல்ல, தமிழகத்தின் பிரச்சாரமாகவும் உள்ளது. அனைவரும் இதில் பங்கெடுக்க வேண்டும்.
தமிழக காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசலை சரிசெய்ய தொடர்ந்து பேச வேண்டும், பேசி வருகிறோம். செயற்குழுவைக் கூட்டியுள்ளோம். பேசப் பேச பிரச்சினைகள் குறையும். காங்கிரஸ் கட்சி ஒரு ஜனநாயக கட்சி. அனைவரின் கருத்துகளையும் கேட்பது மிகவும் பலமானது. காங்கிரஸ் குடும்பத்தில் உள்ளோரிடம் தொடர்ந்து பேசுவோம். மூத்தவர்கள் மீது மரியாதையுடன் அவர்களது கருத்துகளை கேட்போம்.
எம்.ஜி.ஆர். கஷ்டப்பட்டு அதிமுகவை வளர்த்தார். ஜெயலலிதாவும் காங்கிரஸ் கட்சி துணையோடு ஆட்சி அமைத்தார். கட்சியை காப்பாற்றி வந்தார். தற்போது அக்கட்சியை சின்னாபின்னமாக்கி வைத்துள்ளார் பழனிசாமி. ஒரு கட்சியை எப்படி அழிக்க முடியும் என்று யாராவது முனைவர் பட்டம் பெற ஆய்வு செய்தால் பழனிசாமிதான், அதில் முக்கிய கதாபாத்திரமாக இருப்பார்.
தற்போது பல கட்சிகளிலிருந்தும் தவெக கட்சிக்குள் பலர் வந்துள்ளனர். அவர்கள் மாறுவதற்கும் கொஞ்சம் நாளாகும். லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர் என்பது உயர்ந்த லட்சியம். இந்த நோக்கம் மிக முக்கியமானது” என்றார்.
அதைத் தொடர்ந்து, உயர் கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் கூறும்போது, “தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக மாணிக்கம் தாகூர் பொறுப்பேற்ற பிறகு தமிழக காங்கிரஸ் தலைநிமிர்ந்து நிற்கிறது.
லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர் என்ற கோஷம் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவத் தொடங்கியுள்ளது. எங்களது மைய நோக்கம் கடந்த 59 ஆண்டுகளில் அரசியல் செய்தவர்கள் எல்லோரும் இனிமேல் நம்மால் லஞ்சம் வாங்க முடியாது, ஊழல் செய்ய முடியாது என்ற பயம் வந்துள்ளது. இதற்கு காரணம் தமிழக முதல்வரும், ராகுல் காந்தியும்தான்.
இருவரும் இணைந்து ஒரு லட்சிய பாதையை தேர்ந்தெடுத்துள்ளார்கள். தமிழகத்தில் 34 பேர் அமைச்சர்களாக உள்ளோம். ஊழல் என்பதே இல்லாத அரசு, எங்கள் அரசு என்று முதல்வர் விஜய் கூறினார். அதற்கு காங்கிரஸ் துணை நிற்கும். ஊழல் அற்ற அரசை அமைப்பதுதான் எங்கள் லட்சியம். இது காமராஜர் கண்ட கனவு. அதை நிறைவேற்றுவதுதான் எங்கள் லட்சியம்” என்று கூறினார்.