“மூடப்பட்ட 12 மணல் குவாரிகள் மீண்டும் திறக்கப்பட்டால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறும்” - வேல்முருகன்

வேல்முருகன் | கோப்புப் படம்
வேல்முருகன் | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: “அமலாக்கத் துறை சோதனையால் மூடப்பட்ட 12 மணல் குவாரிகளை மீண்டும் திறக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். இந்த மணல் குவாரிகள் அமைக்கப்பட்டால் காவிரி, கொள்ளிடம், வெள்ளாறு உள்ளிட்ட ஆறுகள் வறண்டு, ஒட்டுமொத்த டெல்டா மாவட்டங்களும் மீளமுடியாத பாலைவனமாக மாறிவிடும்” என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “அமலாக்கத்துறை சோதனையால் மூடப்பட்ட மணல் குவாரிகளில், மீண்டும் 12 குவாரிகளைத் திறக்க தமிழக அரசு எடுத்துள்ள முடிவு பேரதிர்ச்சி அளிக்கிறது. இது ஒட்டுமொத்த தமிழகத்தின் சுற்றுச்சூழல் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தின் மீது தொடுக்கப்பட்ட நேரடித் தாக்குதலாகும்.

செயற்கைக்கோள் மூலம் கண்காணிப்போம் என்று அரசு கூறும் சாக்குப்போக்குகள் அத்தனையும் ஏமாற்று வேலை. கட்டுமானத் தட்டுப்பாட்டிற்கு மாற்று வழிகள் இருக்கும்போது, ஆறுகளைப் பலியிடத் துடிப்பது ஏன்?. அரசின் கணக்குப்படியே, புதிய குவாரிகள் மூலம் ஆண்டுக்குச் சுமார் 2.74 கோடி யூனிட் மணல் அள்ளப்படவுள்ளது. இது சுற்றுச்சூழல் ஆணையம் அனுமதித்த அளவை விட 36 மடங்கு அதிகம்.

இவ்வளவு பெரிய கொள்ளை அதிகாரப்பூர்வமாகவே நடந்தால், காவிரி, கொள்ளிடம், வெள்ளாறு உள்ளிட்ட ஆறுகள் வறண்டு, ஒட்டுமொத்த டெல்டா மாவட்டங்களும் மீளமுடியாத பாலைவனமாக மாறிவிடும்.

எனவே, இந்த 12 மணல் குவாரிகளைத் திறக்கும் மக்கள் விரோத முடிவை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்றும், மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்தி, காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் குறைந்தது 5 கிலோமீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்டி நிலத்தடி நீரையும், விவசாயத்தையும் பாதுகாக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் தமிழக அரசை மிக வன்மையாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

வேல்முருகன் | கோப்புப் படம்
“குதிரை பேர விவகாரத்தில் தொகுதி மக்கள் கேள்வி எழுப்பினால் எம்எல்ஏக்கள் யோசிப்பார்கள்” - பெ.சண்முகம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in