

சென்னை: ரயில்களில் மகளிர் பெட்டியில் ஆண்கள் பயணித்தால் அபராதம் ரூ.500-ல் இருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. புதிய விதிமுறைகள் நேற்று முதல் அமலுக்கு வந்தன.
ரயில்வே செயல்பாடுகளை வலிமைப்படுத்தவும், பயணிகளின் ஒழுக்கத்தை மேம்படுத்துவும் வகையில், ரயில்வே சட்டம் 1989-ன் படி, பல விதிகள் திருத்தப்பட்டுள்ளன.
அதன்படி, ரயில்களில் மகளிர் பெட்டிகளில் அனுமதியின்றி ஆண்கள் நுழைந்தாலோ அல்லதுபயணித்தாலோ அபராதத் தொகை ரூ.2,500 விதிக்கப்பட்டுள்ளது. முன்பு இத்தொகை ரூ.500 ஆக இருந்தது. இது தவிர, ரயில்களில் உரிய டிக்கெட் இல்லாமல் பயணிப்போர் மீது, முன்பு ரூ.250 அபராதம் விதிக்கப்பட்டது. இத்தொகை, ரூ.500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இப்புதிய விதிமுறைகள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
இது குறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: ரயில்வே சட்டம் 1989-ன் படி, விதிமீறல்களுக்கு விதிக்கப்படும் அபராத தொகை ரூ.500-ல் இருந்து அதிகபட்சமாக ரூ.5,000 வரை உயர்த்தப்பட்டுள்ளன. அதன்படி, ரயில் நிலையங்களில் அனுமதியின்றி விற்பனை செய்தால் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். இதை செலுத்த மறுத்தால், நீதிமன்றம் வாயிலாக ரூ.5 ஆயிரம் வரை அபராதம் செலுத்தும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
பெண்களுக்கான பெட்டி களில் ஆண்கள் பயணித்தால் ரூ.2,500-ம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ரயிலில் புகைப் பிடித்தால் ரூ.2 ஆயிரமும், மாற்றுத் திறனாளிகள் பெட்டியில் பயணித்தால், ரூ.2 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது தவிர, ரயில்களில் அபாயகரமான பொருட்களை எடுத்து சென்றால், ரூ.2 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை விதிக்கப்பட்ட அபராதம் ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.