

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்று இரு வாரங்களை கடந்துள்ளது. இந்த இரு வார காலகட்டத்தில் சில அமைச்சர்களின் பேச்சுக்கள் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், சிலரின் அணுகுமுறைகள் சர்ச்சைகளை உருவாக்கியுள்ளன.
முதல்வர் விஜய்யின் அமைச்சரவையில் செங்கோட்டையனை தவிர மற்ற அனைவருமே புதியவர்கள்தான். அதிலும் பெரும்பாலானோர் இளைஞர்கள் என்பது தமிழக மக்களுக்கே நம்பிக்கையளிக்கும் விஷயமாக உள்ளது. தங்கள் குடும்பத்தில் ஒருவரைப் போன்ற, எளிமையானவர்கள் அதிகாரத்தை அடைந்துள்ளதை மக்கள் ஆச்சர்யத்துடன் வரவேற்பதை பார்க்க முடிகிறது.
ஆட்சி மற்றும் நிர்வாக ரீதியாக தவெக அரசு எடுக்கும் சில முடிவுகள் விமர்சனங்களுக்கு உள்ளாகும்போது, அதனை மாற்றிக்கொள்ளும் போக்கையும் காண முடிகிறது. அதன்படி உடனடியாக ஜோதிடர் ராதன் பண்டிட்டின் நியமனத்தை அரசு ரத்து செய்தது. ஆளுநர் மாளிகையில் நடந்த முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு விழாக்களில் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டதை, அனைத்து தரப்பும் எதிர்த்த நிலையில், ‘எங்கள் அரசு எப்போதும் தமிழுக்கே முதலிடம் கொடுக்கும். உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படியே வந்தேமாதரம் முதலில் பாடப்பட்டதாக ஆளுநர் பதிலளித்தார். தமிழக அரசின் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்தே முதலில் பாடப்படும்’ என்று விளக்கம் கொடுத்து நம்பிக்கையளித்தார் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா.
பிஎம்ஸ்ரீ திட்டம், மும்மொழிக் கொள்கை விவகாரத்தில், ‘எங்களின் கொள்கை இருமொழிக் கொள்கையே. அதனையே எங்கள் அரசு உறுதியாக பின்பற்றும்’ என்று அழுத்தமாக முழங்கினார் பள்ளிக்க ல்வித் துறை அமைச்சர். அத்துடன், “கடந்த திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டிருந்தாலும், மாணவர்களுக்கு பயனுள்ள எந்தத் திட்டங்களும் நிறுத்தப்படாது. அந்த வகையில், காலை உணவுத் திட்டமும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்” என்றும் அவர் உறுதிபட தெரிவித்துள்ளார்.
கோடைக் கால மின்வெட்டு அதிகரித்திருப்பதாக தமிழகம் முழுவதும் குற்றச்சாட்டுகள் அதிகரித்த நிலையில், மின்சாரத் துறையில் பல்வேறு ஆய்வுகளை நடத்தி ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளதாக சொன்னார் மின்துறை அமைச்சர் நிர்மல் குமார்.
ஆனால், சில அமைச்சர்களின் கருத்துகள் விமர்சனங்களிலும் சிக்கியுள்ளன. சில நாட்களுக்கு முன்பு 8,000 தனியார் மருத்துவமனைகள் திறக்க தற்காலிக அனுமதி வழங்கப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தது பெரும் சர்ச்சைகளை கிளப்பியது. அரசு மருத்துவமனைகளை வலுப்படுத்தாமல், தனியார் மருத்துவமனைகளை ஊக்கப்படுத்துவதா என்ற கேள்வியை பலரும் எழுப்பினர்.
இதற்கு விளக்கமளித்த மருத்துவத் துறை, ‘2019 முதல் விண்ணப்பித்து நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை வெளிப்படையான முறையில் பரிசீலிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பெறப்பட்ட விண்ணப்பங்களை நேர்மையாக பரிசீலித்து தற்காலிகச் சான்றிதழ் வழங்க அறிவுரை வழங்கப்பட்டது. புதிதாக 8,000 மருத்துவமனைகள் துவங்குவதற்கு உண்டான எந்த விதமான அறிவிப்பும் வழங்கப்படவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல அமைச்சர் அருண் ராஜ் தெரிவித்த மற்றொரு கருத்தும் இப்போதும் சர்ச்சையில் மாட்டியுள்ளது. ‘இனிவரும் காலங்களில் தமிழக அமைச்சர்களும், தவெக எம்எல்ஏக்களும் அரசு மருத்துவமனைகளில்தான் சிகிச்சை பெறுவார்கள்’ என அருண் ராஜ் தெரிவித்திருந்தார். ஆனால், சமீபத்தில் மருத்துவப் பரிசோதனைக்காக, அமைச்சர் செங்கோட்டையன் தனியார் மருத்துவமனையில் சேர்ந்ததை நெட்டிசன்கள் வறுத்து எடுத்தனர்.
இதற்கு விளக்கமளித்த அமைச்சர் செங்கோட்டையன், ‘இது என் உறவினர் மருத்துவமனை. எப்பொழுதும் இங்கே சிகிச்சை பெறுவதுதான் வழக்கம். உறவினர் மருத்துவமனையில் இலவசமாக கிடைக்கின்ற சலுகை என்பதால், அரசு மருத்துவமனையில் பெற வேண்டிய நிலை இல்லை. இங்கே எனக்கு அனைத்து சிகிச்சைகளும் இலவசமாக கிடைக்கின்றது’ என்று சொல்லி அடுத்த சர்ச்சையை ஆரம்பித்து வைத்துள்ளார்.
மேலும், அனைத்துப் பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் எனும் தவெகவின் வாக்குறுதியை எப்போது நிறைவேற்றுவீர்கள் என்ற கேள்விக்கு, “திமுக அரசு பல ஆண்டுகளுக்குப் பிறகே தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியது. நிதி ஆதாரத்தின் அடிப்படையில் வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றுவோம்” என்றார் செங்கோட்டையன்.
சீனியர்கள் ஒருபுறம் இருக்க, புதிதாக பொறுப்புக்கு வந்த அமைச்சர்கள் சிலரின் பேச்சுகள் இணையத்தில் பகடிக்கு உள்ளாகியுள்ளன. சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜீவ், தனது துறையையே மறந்துவிட்டு, ஒரு செய்தியாளர் சந்திப்பில், ‘சுற்றுலாத் துறை’ என பலமுறை சொன்னார். செய்தியாளர்கள் இதனை சுட்டிக்காட்டியவுடன், ‘ரீ டேக் போகலாமா’ என்கிற ரீதியில் கேட்டு அதிரவும் வைத்துள்ளார். வயதில் இளையவராக இருக்கலாம், ஆனால் தன் துறையை கூட ஓர் அமைச்சரால் நினைவில் வைத்துக்கொள்ள முடியாதா என்ற கேள்விகளால் சோஷியல் மீடியா திணறுகிறது.
தேர்தலுக்கு முன்பே இணையத்தில் தனது புரட்சிகர வீடியோக்களால் புகழ் பெற்றவர் விருதையின் மகள் கீர்த்தனா, அவர் மாண்புமிகு அமைச்சரான உடனேயே ‘மாற்றுத் திறனாளிகள்’ குறித்து பேசியது கண்டனங்களுக்கு உள்ளானது. உடனே சுதாரித்த அவர், ‘நானே மாற்றுத் திறனாளி தாயின் மகள் தான்’ என பிரச்சினையை முடித்து வைத்தார்.
ஆனாலும், சமீபத்தில் ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் கீர்த்தனாவிடம், கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை குறித்து கேட்டபோது, “அரசியல் தொடர்பாக இப்போது பேச வேண்டாம்” என சொல்லி சிரித்தபடி சென்றதாக விமர்சனங்கள் எழுந்தன. இதற்கும் விளக்கம் கொடுத்த அவர், ‘இயல்பாக சிரித்ததை அரசியல் ஆக்குகிறார்கள்’ என்று சமாளித்தார். மேலும், அமைச்சர் கீர்த்தனா ஆய்வுக்கு செல்லும் வீடியோக்களுக்கு ‘பிஜிஎம் பாடல்’ போட்டு சமூக வலைதளங்களில் பகிர்கிறார் என்றும் விமர்சிக்கின்றனர் நெட்டிசன்கள்.
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ், மதுபாட்டில்களுக்கு ரூ.10 வாங்குவதற்கு காரணம் கற்பித்து விளக்கமளித்ததாகவும் இணையத்தில் வைரல் வீடியோக்கள் பரவி வருகின்றன.
சமீபத்தில் திருச்சி திருவானைக்காவல் கோயில் பிரசாதக் கடையில் ஆய்வு செய்த இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ், உணவுப் பொருட்களின் தயாரிப்பு தேதி குறித்து அலுவலர்களிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார். ஒரு கட்டத்தில் ‘இந்த முறுக்கு 15-ஆம் தேதி தயாரித்துள்ளதாக போட்டுள்ளார்கள். இதனை 15-ஆம் தேதிதான் தயார் செய்தார்கள் என்பதற்கு என்ன ஆதாரம் உங்களிடம் இருக்கிறது?’ என்று கேட்டு அதிர்ச்சியடைய வைத்தார்.
தவெக அரசு பதவியேற்று இரு வாரங்களே ஆகும் நிலையில், தமிழகம் முழுவதும் நடக்கும் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் என சட்டம் - ஒழுங்கு நிலைமை, மக்களை வாட்டும் மின்வெட்டு பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப ஆரம்பித்துள்ளன. இந்த நேரத்தில் அமைச்சர்களின் அணுகுமுறையால் அரசுக்கு கூடுதல் சுமையை ஏற்படாமல் இருந்தால் இருந்தால் சரி.