

வருசநாடு: மேகமலை வன விவசாயிகள் குடும்பத்தைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க துறை தலைமை அதிகாரிகளுக்கு, தேனி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம் கடமலை - மயிலை ஒன்றியத்தில் உள்ள வருசநாடு, மேகமலை, தும்மக்குண்டு, சிங்கராஜபுரம், நரியூத்து, முத்தாலம்பாறை, பொன்னம்படுகை, தங்கம்மாள்புரம், முருக்கோடை ஆகிய 9 ஊராட்சிகளுக்குட்பட்ட 98 மலைக் கிராமங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், 2021-ம் ஆண்டு பிப்.9-ம் தேதி இப்பகுதி புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இங்கு வசிக்கும் 4,601 பேரை வெளியேற்ற வனத்துறை தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக, இவர்களை துணை ராணுவம் மூலம் அகற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகளும், கட்சிகளும் தொடர்ந்து போராடி வருகின்றன. தமிழக அரசும் மறுசீராய்வு மனு செய்யப்படும் என்று, இப்பகுதி மக்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளது. இந்நிலையில், வன விவசாயிகளின் குடும்பத்தில் உள்ள 118 அரசு ஊழியர்கள் அந்த நிலத்தை விட்டு வெளியேற வேண்டும்.
இல்லையெனில், துறைரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த விவரம்: வன விவசாயிகள் குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் 118 பேர் ராணுவம், காவல் துறை, வேளாண்மை, கிராம நிர்வாக அலுவலர், சுகாதாரம், தபால் துறை, நியாய விலைக் கடை, விடுதி காப்பாளர், மின்வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களின் குடும்பம் வனத்தை விட்டு வெளியேறாவிட்டால், இந்த 118 அலுவலர்கள் மீதும் துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி, துறை தலைமை அதிகாரிகளுக்கு தேனி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் ஊதியம், கவுரவ ஊதியம் பெறும் சத்துணவு ஊழியர்கள் எவரேனும் அப்பகுதியில் இருந்தால், அவர்கள் அங்கிருந்து வெளியேற மாவட்ட சத்துணவுத் துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். பொதுமக்களும், பல்வேறு கட்சியினரும் தொடர்ந்து போராடி வரும் நிலையில், அடுத்தடுத்த நடவடிக்கை அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.