தேன்கூடுகளை தாக்கும் கூட்டு வண்டுகள்: அச்சத்தில் தேன் விவசாயிகள்

தேன்கூடுகளை தாக்கும் கூட்டு வண்டுகள்: அச்சத்தில் தேன் விவசாயிகள்
Updated on
1 min read

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் தேன் கூடுகள் வைத்து விவசாயிகள் தேன்உற்பத்தி செய்து வருகின்றனர்.

இத்தேன் கூடுகளை சமீபத்தில் ஆப்பிரிக்காவை தாயகமாக கொண்ட சிறிய கூட்டு வண்டுகள் தாக்கி சேதம் விளைவித்து வருகின்றன. இந்த வண்டுகள், தேனீக் கூடுகளை அழிக்கும் ஆபத்தான பூச்சியாகும். 2013-ல் உலக விலங்கு சுகாதார அமைப்பு இதை சர்வதேச அளவில் ஆபத்தான பூச்சியாக பட்டியலிட்டது.

இந்தியாவிலும் இப்பூச்சிகள் பரவியதால் தேன் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டு வருகிறது. கடந்த ஜூலை மாதம் பொள்ளாச்சி, ஆனைமலைப் பகுதியில் இந்தியத் தேனீ மற்றும் இத்தாலியத் தேனீ கூடுகளில் இவை கண்டறியப்பட்டன. தற்போது குமரி மாவட்டத்தில் உள்ள தேன்கூடுகளை தாக்கும் என்ற அச்சமும் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

கிரீம் நிறத்தில், முதுகில் முட்களுடன் காணப்படும் இந்த வண்டுகள் தேன், மகரந்தம், தேனீ முட்டைகள் மற்றும் அடைகளைத் தின்று சேதப்படுத்துகின்றன. அத்துடன் தேனை நுரைக்கச் செய்து துர்நாற்றமடிக்க வைக்கின்றன. இதனால் தேன் பயன்பாட்டுக்கு உதவாமல் போகும்.

இதுகுறித்து தோட்டக் கலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: சிறிய கூட்டு வண்டுகளின் தாக்கத்தில் இருந்து தேன் கூடுகள் மற்றும் தேனீக்களை காப்பாற்றிக் கொள்ள 7 முதல் 10 நாட் களுக்கு ஒருமுறை கூடுகளின் அடியமைப்பு மற்றும் இடுக்கு களை ஆய்வு செய்ய வேண்டும்.

தாவர எண்ணெய் அல்லது ஆப்பிள் சைடர் வினிகர் நிரப்பிய எண்ணெய் பொறிகளை கூடு களின் அடியில் வைக்க வேண் டும். ராணித் தேனீயுடன் கூடிய வலிமையான கூடுகளை மட்டுமே பராமரிக்க வேண்டும். பலவீனமான கூடுகளை ஒன்றிணைக்க வேண்டும். கூட்டின் அடிப்பகுதியில் உள்ள கழிவுகள் மற்றும் இறந்த தேனீக்களை உடனுக் குடன் அகற்ற வேண்டும்.

பாதிக்கப்பட்ட அடைகளைச் சுரண்டி அகற்றி, எண்ணெய் பொறிகளை உடனடியாக வைக்க வேண்டும். கூட்டைச் சுற்றியுள்ள மண்ணைக் கிளறி வேப்பம் பிண்ணாக்கு இட வேண்டும். மேலும் தகவலுக்கு தேனீ விவசாயிகள் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மின்னஞ்சலில் directorcpps@Inau.ac.in தொடர்புகொள்ளலாம். இவ்வாறு தெரிவித்தனர்.

தேன்கூடுகளை தாக்கும் கூட்டு வண்டுகள்: அச்சத்தில் தேன் விவசாயிகள்
“கார்கேவை வேண்டுமென்றே இழிவுபடுத்துகிறது பாஜக” - வைத்திலிங்கம் சாடல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in