

புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி
புதுச்சேரி: “பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதால் வேண்டும் என்றே இழிவுப்படுத்துகின்றனர்” என்று மல்லிகார்ஜுன கார்கே குறித்த பாஜக செயல்பாடுக்கு வைத்திலிங்கம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கர்நாடக மாநிலம் யாதகிரி கல்வார்டு பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அந்த கூட்டத்தில் பங்குபெற்று சென்ற பிறகு அங்குள்ள பாஜக தலைவர்கள், தொணடர்கள் கும்பலாக சென்று அந்தப் பகுதியை சுத்தம் செய்ய வேண்டும் என்று கூறி, புனிதப்படுத்துகிறோம் என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சியை நடத்தி இருக்கின்றார்கள்.
வேண்டும் என்றே சாதி, இனத்தை வைத்துக்கொண்டு இப்படிப்பட்ட நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார்கள். பட்டியலின மக்கள் இனத்தைச் சேர்ந்த தலைவர் என்பதால் வேண்டும் என்றே இழிவுப்படுத்த வேண்டும் என்பதற்காக இதனை செய்திருக்கிறார்கள். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இது அவருக்கு ஏற்பட்ட இழிவு என்பதை விட, அந்த சமுதாயத்தை சார்ந்த பட்டியலின மக்கள் அனைவருக்குமே அச்சுறுத்தல் தருகிற நிகழ்வு. காங்கிரஸ் கட்சியின் பெரிய தலைவர், நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய எதிர்கட்சித் தலைவர் இப்படி பல்வேறு பொறுப்புகளில் இருக்கும் தலைவருக்கே இவ்வாறு நடந்துள்ளது என்றால், அது எவ்வளவு மோதனமானது. யார் இதனை செய்திருந்தாலும் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும்.
புதுச்சேரியில் உள்ள காங்கிரஸ் கட்சியினர், அந்தந்த பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் இந்த செயலைச் செய்த பாஜகவினர் மீது புகார் அளிக்க இருக்கிறார்கள். இதற்கான நடவடிக்கையை எடுத்துக் கொண்டிருக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.