

மதுரை: மாற்று மதத்தினர் மத அடையாளங்களுடன் இந்து கோயில்களுக்குள் நுழைவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
இந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கத்தின் மாநிலப் பொருளாளர் எச்.ஆதிசேஷன் கூறியதாவது: திருவண்ணாமலை கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா ஏற்பாடு தொடர்பாக ஆய்வு செய்ய வந்த அமைச்சர்களுடன், அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் உதவியாளர் என்ற பெயரில் தொப்பி அணிந்த இஸ்லாமியர் ஒருவர் கோயிலுக்குள் நுழைய முயன்றுள்ளார். இதைக் கண்டிக்கிறோம். சமீபத்தில், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ முஸ்தபா தொப்பியுடன் நுழைந்தது சர்ச்சைக்கு உள்ளானது.
இந்துக்கள் அல்லாத மாற்று மதத்தினர் குறிப்பாக இஸ்லாமியர்கள், மத அடையாளங்களுடன் இந்து கோயில்களுக்குள் நுழைவது தன்னிச்சையாக நடைபெறுவதுபோல் தெரியவில்லை. அவமானப்படுத்தும் செயல் திட்டமாகவே தெரிகிறது. இந்து கோயில்களில் பராமரிக்கப்படும் கையேட்டில், மாற்று மதத்தினர் முழு நம்பிக்கையின் அடிப்படையில் கையெழுத்திட்டு வழிபாடு நடத்துவதில் தவறில்லை. ஆனால், மத அடையாளத்தோடு கோயில் வளாகத்தில் நுழைவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.
இதில் அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் மவுனமாக இருப்பது ஏற்புடையது அல்ல. உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும். மீண்டும் இது போன்று நடக்காது என்று உறுதி அளிக்க வேண்டும். இது தொடர்பாக அறநிலையத் துறை தெளிவான சுற்றறிக்கையை கோயில் செயல் அலுவலர்களுக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.