

இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார்
மதுரை: ரம்ஜான் காலத்தில் நோன்பு கஞ்சிக்கு அரிசி வழங்குவதைப் போல் அம்மன் கோயில்களில் ஆடி மாதங்களில் கூழ்வார்க்க கம்பு, கேழ்வரகு, அரிசி வழங்க வேண்டும் என இந்து தமிழர் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் கூறியது: ”தமிழகத்தில் ரமலான் மாதத்தில் பள்ளி வாசல்களில் நடைபெறும் நோன்பு கஞ்சி தயாரிப்பதற்காக தமிழக அரசு ஆண்டுதோறும் அரிசி வழங்கி வருகிறது. சமூக நலன் மற்றும் மத நல்லிணக்கத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையைப் போலவே, தமிழர்களின் தொன்மையான பண்பாட்டு அடையாளமான ஆடி மாத அம்மன் திருவிழாக்களில் நடைபெறும் "கூழ்வார்த்தல்" நிகழ்வுக்கு தமிழக அரசு உரிய ஆதரவு வழங்க வேண்டும்.
தமிழகம் முழுவதும் உள்ள மாரியம்மன், காளியம்மன், அங்காளம்மன், திரௌபதியம்மன், எல்லையம்மன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான அம்மன் கோயில்களில் ஆடி மாதம் முழுவதும் கம்பு, கேழ்வரகு, சோளம் மற்றும் அரிசியைக் கொண்டு கூழ் தயாரித்து அம்மனுக்கு நிவேதனம் செய்து, பின்னர் பக்தர்களுக்கும் பொது மக்களுக்கும் அன்னதானமாக வழங்கும் பாரம்பரியம் பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து வருகிறது.
இந்த கூழ்வார்த்தல் நிகழ்வு ஒரு மதச் சடங்கு மட்டுமல்ல. இது சமூக ஒற்றுமை, அன்னதானம், கிராமிய பண்பாடு, விவசாய மரபு, சிறு தானிய உணவுப் பழக்கம், பொதுச் சுகாதாரம் மற்றும் மனித நேயத்தின் வெளிப்பாடாகும். இதில் மதம், சாதி, பொருளாதார நிலை போன்ற எந்த வேறுபாடும் இன்றி அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது.
தமிழர்களின் பாரம்பரியமான ஆடி மாத கூழ்வார்த்தல் நிகழ்வு பண்பாட்டு மரபின் முக்கிய அங்கமாக இருப்பதால், அதற்கு அரசு ஆதரவு வழங்குவது அரசியலமைப் பின் நோக்கத்திற்கும் சமூக நீதியின் கொள்கைக்கும் ஏற்புடையதாகும்.
எனவே, மாநிலம் முழுவதும் உள்ள இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் மற்றும் கிராமப் புற அம்மன் கோயில்களில் ஆடி மாத கூழ்வார்த்தல் நடைபெற 10,000 மெட்ரிக் டன் கம்பு, கேழ்வரகு மற்றும் அரிசியை தமிழக அரசு இலவசமாக வழங்க வேண்டும். இதற்காக ஆண்டுதோறும் தனி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட வேண்டும்.
இந்த திட்டத்தை இந்து சமய அறநிலையத் துறை, உணவுப் பொருள் வழங்கல் துறை மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் இணைந்து செயல்படுத்த வேண்டும். கம்பு மற்றும் கேழ்வரகை உள்ளூர் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து வழங்குவதன் மூலம் சிறு தானிய விவசாயிகளுக்கும் ஆதரவு அளிக்க வேண்டும்.
இதற்காக தமிழக அரசு உடனடியாக அரசாணை வெளியிட்டு மாநிலம் முழுவதும் நடைபெறும் ஆடி மாத அம்மன் கூழ்வார்த்தல் நிகழ்வுக்காக 10,000 மெட்ரிக் டன் கம்பு, கேழ்வரகு மற்றும் அரிசியை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ராம ரவிக்குமார் கூறினார்.