புதிய ஸ்பைடர் மேன்: பித்துப் பிடித்து அலையும் மார்வெல் ரசிகர்கள்!

புதிய ஸ்பைடர் மேன்: பித்துப் பிடித்து அலையும் மார்வெல் ரசிகர்கள்!
Updated on
3 min read

ஒருபுறம் உலகமே ‘ஃபிபா’ கால்பந்தின் மீது கண்களைப் பதித்திருக்கிறது. இன்னொரு பக்கம், அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் எவ்வளவு காலம் தாக்குப் பிடிக்கும் என்கிற கவலை உலகை ஆட்டிப் படைக்கிறது. இதுபோல், ஆயிரம் விஷயங்கள் இருந்தாலும் அவையெல்லாம் ‘மார்வெல்’ ரசிகர்களை பாதிப்பதில்லை. அவர்களைப் பொறுத்துவரை, ‘ஸ்பைடர் மேன்’ வரிசைப் படங்களின் ரிலீஸ் தேதியைத் தங்களுடைய பிறந்த நாளைவிடச் சிறப்பாகக் கொண்டாடத் தயாராகிவிடுவார்கள்.

இப்போது ஜூலை 30-ஆம் தேதிக்காகக் காத்திருக்கிறார்கள். காரணம், புத்தம் புதிய ‘ஸ்பைடர்மேன் - பிராண்ட் நியூ டே’ (Spider-Man: Brand New Day) திரைப்படம் அந்த நாளில்தான் உலகம் முழுவதும் ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகிறது.

ட்ரெய்லர் ஏற்படுத்திய எதிர்பார்ப்பு

கோலிவுட்டில் ஒரு திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானால் இரண்டு வார முடிவில் 10 மில்லியன் பார்வையாளர்களை எட்டும் மாஸ் படங்கள் உண்டு. ஆனால், ‘ஸ்பைடர்மேன் - பிராண்ட் நியூ டே’ படத்தின் ட்ரெய்லர் வெளியான 10 நாள்களில் 40 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து வைரலாகிக் கொண்டிருக்கிறது. இந்த ட்ரெய்லர் சொல்ல வரும் பீட்டர் பார்க்கரின் உலகில் கொடூரமான புதிய வில்லன் விஷக் கொடுக்குடன் ஒரு ஸ்கார்பியோ மனிதனாகக் காட்சியளிக்கிறான். ஆனால், முக்கிய வில்லன் இவனைவிட எவ்வளவு கொடூரமாக இருக்கப் போகிறானோ என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும், புகழ்பெற்ற ‘ஹல்க்’ கேரக்டரை பீட்டர் பார்க்கர் எந்தச் சூழ்நிலையில் சந்திக்கப் போகிறார் என்பதும் மார்வல் ரசிகர்களின் மண்டையைப் பிய்த்துக் கொள்ள வைத்திருக்கிறது. இதற்கிடையில், பீட்டர் பார்க்கருக்கும் அவருடைய ‘லவ் இன்ட்ரஸ்ட்’ எம்.ஜேவுக்குமான பகுதிகள் எப்படி அமைக்கப்பட்டுள்ளன என்பதைக் காணவும் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள். மிக மிக முக்கியமான, டாக்டர் புரூஸ் பேனர், பீட்டர் பார்க்கருக்கு எப்படி உதவப்போகிறார் என்பதும் ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறது.

இந்தப் படத்தின் ஆக்‌ஷன் பிளாக்குகளைப் பொறுத்துவரை, அதிரடி மன்னன் ஜாக்கி ஜானின் குழுவினர் ஸ்டன்ட்களை வடிவமைத்திருப்பது ஒரு மாறுபட்ட ஹாலிவுட் மார்ஷியல் ஆர்ட் கலவையாக ‘மார்வெல்’ வரிசைப் படத்தில் இடம்பெற இருப்பது இதுவே முதல் முறை.

இன்னொரு முக்கியமான அம்சமும் இணையவாசிகளால் தற்போது விவாதிக்கப்பட்டு வருகிறது. அது, நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் பிளாக் பஸ்டர் வரவேற்பைப் பெற்ற ‘ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் சீசன் 2’ (Stranger Things season 2) தொடரில் ரசிகர்களின் மனதைக் கொள்ளையடித்த நட்சத்திரம் செடி சிங் (Sadie Sink) இதில் முக்கியமான கதாபாத்திரம் ஏற்றிருப்பதைப் படக்குழு மிக ரகசியமாக வைத்திருக்கிறது. இந்த நட்சத்திரம் படத்தின் உள்ளே வந்திருப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.

இன்னும் ‘ஸ்பைடர்மேன் - பிராண்ட் நியூ டே’ படத்தைப் பற்றி நெட்டிசன்கள் பைத்தியங்கள்போல் விவாதித்துக் கொண்டிருப்பதை இங்கே பட்டியலிடலாம். ஆனால், இந்தக் கட்டுரையின் அடுத்த முக்கியமான அங்கமாக, இந்தப் படத்தைப் பார்த்து அதன் திரை அனுபவத்தை முழுமையாகப் பெற்று இன்புற வேண்டுமானால், இப்படத்துக்கு முன் வந்த ‘மார்வெல் - ஸ்பைடர்மேன்’ வரிசைப் படங்களையும் நீங்கள் ஒடிடியில் பார்க்க வேண்டும்.

பார்க்க வேண்டிய முந்தைய படங்கள்

கடந்த 2016-ல் வெளிவந்த ‘கேப்டன் அமெரிக்க சிவில் வார்’ (Captain America: Civil War) திரைப்படத்தில் தான் மார்வெல் சினிமாட்டிக் யூனிவர்ஸில் ஸ்பைடர் மேன் அறிமுகமானார். அப்போது இளம் பீட்டர் பார்க்கரை டோனி ஸ்டார்க் கண்டுபிடித்து, அவரது திறமையை நம்பி ஒரு சூப்பர் ஹீரோவாக வளர வழிகாட்டினார்.

அதற்கு முன் வெளியான ‘ஸ்பைடர்மேன்: ஹோம் கமிங்’ (Spider-Man: Homecoming) படத்தில், ஓர் இளம் மாணவன் தனது சாதாரண வாழ்க்கையையும் சூப்பர் ஹீரோ பொறுப்பையும் எப்படிச் சமாளிக்க முயலுகிறார் என்பதைக் காட்டியது. இந்தத் திரைப்படம் பீட்டரின் ஆரம்பக் கால ஹீரோ பயணத்தைப் புரிந்து கொள்ள உதவுகிறது.

‘அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார்’ (Avengers: Infinity War) மற்றும் ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ (Avengers: Endgame) ஆகிய இரண்டு படங்களும் பீட்டரை மிகப் பெரிய உலகளாவிய போருக்கு அழைத்துச் சென்றன. குறிப்பாக டோனி ஸ்டார்க்கின் மரணம், பீட்டரின் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. டோனியை ஒரு வழிகாட்டியாக மட்டுமல்லாமல், குடும்ப உறுப்பினர் போல் பார்த்த பீட்டருக்கு இந்த இழப்பு மிகுந்த வேதனையைக் கொடுத்தது.

2019-ல் வெளியான ‘ஸ்பைடர்மேன்: ஃபார் பிரம் ஹோம்’ (Spider-Man: Far From Home) படத்தில் டோனியின் மறைவுக்குப் பிறகு தனது சொந்த அடையாளத்தைத் தேடும் பீட்டரை பார்க்க முடிந்தது. ஆனால் 2021-ல் வெளியான ’ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்’ (Spider-Man: No Way Home) பீட்டரின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. தனது ரகசியம் உலகுக்குத் தெரிந்த பிறகு, தன்னுடைய நண்பர்களையும் அன்புக்குரியவர்களையும் பாதுகாப்பதற்காக பீட்டர் எடுத்த முடிவு அவரது வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றியது.

தற்போது வெளியாகவிருக்கும் ‘ஸ்பைடர்மேன் - பிராண்ட் நியூ டே’ திரைப்படத்தை இன்னும் நன்றாகப் புரிந்து கொள்ள, மேலும் சில ‘சூப்பர்’ கதாபாத்திரங்களைத் தெரிந்து கொள்வது உதவியாக இருக்கும். ‘ஸி -ஹல்க்’ (She-Hulk), ‘லோகி’ சீசன் (Loki) 1, 2, ‘டேர்டெவில்: பார்ன் அகைன்’ (Daredevil: Born Again) மற்றும் ‘த பனிஷர்’ (The Punisher) போன்ற இணையத் தொடர்களில் இடம்பெற்ற சூப்பர் கதாபாத்திரங்களின் உலகைத் தெரிந்து கொள்வது அவசியம்.

இதை வாசித்தபின் நீங்களும் கூட ஒரு ‘மார்வெல்’ ரசிகராக மாறியிருக்கக் கூடும். காமிக்ஸில் விரிந்த உலகம், 70 எம்.எம். திரையையும் கடந்து ஐமேக்ஸில் உயிருடன் விரிந்தால் ‘ஸ்பைடர்மேனை’ யாருக்குத்தான் பிடிக்காது.

புதிய ஸ்பைடர் மேன்: பித்துப் பிடித்து அலையும் மார்வெல் ரசிகர்கள்!
‘மரியான் என்றும் 13’ - மகளை இழந்த தாயின் வலி பேசும் மொழியாக்க புத்தகம்!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in