விநாயகர் சதுர்த்திக்காக இடைத்தேர்தலை ஒத்திவைக்க இந்து முன்னணி கோரிக்கை

விநாயகர் சதுர்த்திக்காக இடைத்தேர்தலை ஒத்திவைக்க இந்து முன்னணி கோரிக்கை
Updated on
1 min read

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், விநாயகர் சதுர்த்தி வர உள்ளதால் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுராந்தகம், தாராபுரம் உள்ளிட்ட இரு சட்டமன்ற தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் இந்த இரண்டு தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிளில் செப்.7-ம் தேதி தேதி முதலே தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டன.

வருகின்ற செப்டம்பர் 14-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி திருவிழா நடைபெற உள்ளது. தமிழகம் முழுக்க விநாயகர் சதுர்த்தி விழா, அனைத்து வீதிகளிலும் வீடுகளிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் திருவிழாவாகும். இந்நிலையில், தேர்தல் விதிமுறைகள் அமலில் இருப்பதால் இரு சட்டமன்ற தொகுதிகளிலும் ஒலிபெருக்கி அமைப்பதற்கும் மேடைகள் அமைப்பதற்கும் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டும் என்பது நடைமுறை ஆகிறது.

விநாயகர் சதுர்த்தி நடைபெறுகின்ற இடங்களில் ஒலிபெருக்கி அமைப்பதற்கும் விழா நடத்துவதற்கும் தேர்தல் ஆணையம் அலுவலகத்தில் பக்தர்கள் அனுமதிக்கு செல்ல வேண்டி இருப்பதால் சிரமப்படும் சூழ்நிலைகள் உருவாகும். விநாயகர் சதுர்த்தியையொட்டி பக்தர்கள் ஊர்வலமாக செல்வதற்கும் நடைமுறை சிக்கல்கள் உருவாகும்.

தேர்தல் காலங்களில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தவிர்ப்பதற்காக அதிகமான வாகன சோதனைகள் நடத்தப்படுவதுண்டு. மக்கள் நியாயமான கணக்குகளோடு கொண்டுவரும் பணத்தை கொண்டு செல்வதற்கும் அச்சப்படுவார்கள்.

விநாயகர் சதுர்த்தி திருவிழா என்பது பல்வேறு வியாபாரங்களோடு தொடர்புடையது. கோடிக்கணக்கான வியாபார பணம் புழக்கத்தில் இருக்கும். இது போன்ற சமயங்களில் தேர்தல் ஆணையம் கெடுபிடி காட்டினால் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்படும்.

தேர்தல் நியாயமாக நடக்க தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் நியாயமானது தான் என்றாலும் கூட விநாயகர் சதுர்த்தி பண்டிகைகளின் போது தேர்தலை நடத்துவது என்பது பக்தர்களையும் வியாபாரிகளையும் சிரமத்திற்கு உள்ளாக்கும் செயலாகவே அமைகிறது.

எனவே மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் தேதியை விநாயகர் சதுர்த்தி விழா முடிந்த பின்பு நடத்த மறு பரிசீலனை செய்து மாற்றி அறிவிக்க வேண்டும் என இந்து முன்னணி சார்பில் தேர்தல் கமிஷனை கேட்டுக் கொள்கிறோம்" என தெரிவித்துள்ளார்.

விநாயகர் சதுர்த்திக்காக இடைத்தேர்தலை ஒத்திவைக்க இந்து முன்னணி கோரிக்கை
“2014 முதல் இதுவரை 50,000 நவீன ரயில் பெட்டிகள் தயாரிப்பு” - பிரதமர் மோடி பெருமிதம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in