

சென்னை: தமிழகத்தில் 2026 தேர்தலை ஆன்மிகமா, திராவிடமா என்ற சித்தாந்தத்தின் அடிப்படையில் சந்திக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
திருபரங்குன்றத்தில் கடந்த 100 ஆண்டுகளாக அதன் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற முடியாத வண்ணம் இருந்து வந்தது. இதற்கு தீர்வு காண்கின்ற வகையில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஆனால் காவல்துறை அனுமதி மறுத்ததால் நேற்று இரவு அங்கு பதற்றம் ஏற்பட்டதுடன், தமிழகத்தில் உள்ள முருக பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக இந்து மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் குருமூர்த்தி கூறியதாது: இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் வழிபாட்டு உரிமையை பறிக்கக் கூடிய வகையில் இந்து சமய அறநிலைத்துறை மேல்முறையீடு செய்தது.
இருப்பினும் பல்வேறு நெருக்கடிகளையும் தாண்டி தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் தமிழக அரசு தேவையற்ற பதற்றத்தை உருவாக்கி சட்ட ஒழுங்கு பிரச்சினையை உருவாக்கிட முனைப்பு காட்டி இந்து வழிபாட்டு உரிமைக்கு எதிராக செயல்பட்டுள்ளது.
இந்த விஷயத்தில் தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள், இந்துக்களின் வழிப்பாட்டு உரிமைக்கு ஆதரவாக அறிக்கை கூட அளிக்காமல் வாய் மூடி மவுனமாக இருந்தது பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிறுபான்மை வாக்குகளுக்காக பெரும்பான்மை இந்துக்களின் வழிபாட்டு உரிமையை பறிப்பது மிகவும் கண்டனத்துக்குரியது.
எனவே, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வழிபாட்டு உரிமைக்கு ஆதரவாக உடனடியாக களம் காண வேண்டும். இல்லை என்றால் இந்துக்களின் வாக்கு தேவையில்லை என பிரகடனம் செய்ய வேண்டும். இது போன்ற அரசியல் கட்சிகளுக்கு பாடம் கற்பிக்கும் வகையில், தமிழகத்தில் 2026 தேர்தலை ஆன்மிகமா, திராவிடமா என்ற சித்தாந்தத்தின் அடிப்படையில் சந்திக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.