

சென்னையில் பெய்து வரும் தொடர் மழையால், செங்குன்றம் குமரன் நகரில் மழைநீர் சூழ்ந்துள்ள பகுதியில் சிக்கி இருந்த மக்களை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் படகு மூலம் மீட்டனர். |படங்கள்: எஸ்.சத்தியசீலன் |
சென்னை: தொடர் மழையால் நீர் வடியாத பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வெள்ளம் சூழ்ந்த பகுதியில் சிக்கிய 30-க்கும் மேற்பட்டோர் படகுகள் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த நவ.29-ம் தேதி முதல் மழை பெய்து வருகிறது. கடந்த டிச.1, 2 தேதிகளில் அதிகனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக, மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் குடியிருப்புகளை மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், அப்பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
குறிப்பாக, மாதவரம் அடுத்த வட பெரும்பாக்கம் சாலை, திருவொற்றியூர் ராஜாஜி நகர், வியாசர்பாடி முல்லைநகர், திரு.வி.க.நகர் மண்டலம், காந்திநகர், வாட்டர் ஒர்க்ஸ் சாலை, தேனாம்பேட்டை மண்டலம், டிரஸ்ட் புரம், அண்ணாநகர் மண்டலம் மில்லர்ஸ் சாலை, சோழிங்கநல்லூர் மண்டலம், கண்ணகி நகர், அம்பத்தூர் தொழிற்பூங்காவின் சில பகுதிகள், பட்டாளம் ஆஞ்சநேயர் கோயில் பகுதி, புளியந்தோப்பில் சில சாலைகள் உள்ளிட்டவற்றில் மழைநீர் தேங்கியுள்ளது.
செங்குன்றம் பகுதியில் மழைநீர் சூழ்ந்ததால், அப்பகுதியில் வசித்த 30-க்கும் மேற்பட்டோரை பைபர் படகுகள் மூலம் பேரிடர் மீட்பு படையினர்
மீட்டனர். ஓட்டேரி பகுதியில் கனமழையால் வீடு இடிந்ததில் 3 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
துணை முதல்வர் ஆய்வு: சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது, சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் தொடர் மழையால் ஏற்பட்ட பாதிப்புகள், உயிரிழப்புகள், கால்நடைகள் இறப்பு, நீரில் மூழ்கியுள்ள பயிர்கள் சேதம், நீர்நிலைகளில் நீர் இருப்பு நிலவரம் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
சென்னை மாநகரில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் ராட்சத மோட்டார்கள் மூலம் மாநகராட்சி சார்பில் வெளியேற்றப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேற்று ஒரே நாளில் மாநகராட்சிசார்பில் 2,74,600 பேருக்கு காலை உணவு, 3,51,300 நபர்களுக்கு மதிய உணவும் வழங்கப்பட்டது.
பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கும் வகையில், நேற்று 103 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன.
பொதுமக்களை மீட்பதற்காக தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 300 பேர், மாநில பேரிடர் மீட்புப் படையினர் 50 பேர் தயார் நிலையில் உள்ளனர்.
மழையின் காரணமாக விழுந்த 64 மரங்களும் வெட்டி அகற்றப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள 22 சுரங்கப் பாதைகளில் மழைநீர்த் தேக்கம் இன்றி போக்குவரத்து சீராக உள்ளது என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கனமழை காரணமாக கிண்டி ரேஸ் கோர்ஸ் வளாகத்தில் மாநகராட்சி சார்பில் புதிதாக அமைக்கப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்ட 4 குளங்களில் நீர் நிறைந்து காணப்படுகிறது.
இதன் காரணமாக, அப்பகுதியை சுற்றியுள்ள கிண்டி, 5 பர்லாங் சாலை, மடுவின் கரை, வேளச்சேரி குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேக்கம் ஏற்படுவது தவிர்க்கப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பள்ளிகளுக்கு விடுமுறை: தொடர் மழை காரணமாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று (4-ம் ேததி) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.