கோயில் நிதியில் கல்லூரி கட்ட தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

கோயில் நிதியில் கல்லூரி கட்ட தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: கோயில் நிதியில் கல்லூரி தொடங்க முந்தைய திமுக ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், கோயில் நிதியை கல்விக்காக பயன்படுத்தலாம் என உத்தரவிட்டுள்ளது.

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் சார்பில் கொளத்தூரிலும், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் நிதியில் திருச்செங்கோட்டிலும், பழநி தண்டாயுதபாணி கோயில் நிதியில் ஒட்டன்சத்திரத்திலும், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் சார்பில் விளாத்திகுளத்திலும் என 4 இடங்களில் கல்லூரிகள் தொடங்க அனுமதி அளித்து தமிழக உயர் கல்வித்துறை செயலர் கடந்த ஆண்டு அக்டோபரில் அரசாணை பிறப்பித்தார்.

இந்த அரசாணைக்கு தடை கோரியும், அதை ரத்து செய்யக் கோரியும் சென்னையை சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், இ.மனோகரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பரணிதரன், “கோயில் நிதியை பயன்படுத்தி கொளத்தூர், ஒட்டன்சத்திரத்தில் கல்லூரிகள் அமைக்கப்பட்டு 3 பேட்ச் மாணவர்கள் படிப்பை முடித்துவிட்டனர்.

திருச்செங்கோடு, விளாத்திகுளத்தில் கல்லூரிகள் இன்னும் அமைக்கப்படவில்லை. கொளத்தூர், ஒட்டன்சத்திரத்தில் உள்ள கல்லூரிகளில் இந்து சமய படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன” என்று தெரிவித்தார்.

மனுதாரர் டி.ஆர்.ரமேஷ், “கோயில் நிதியை கல்லூரிகள் கட்ட பயன்படுத்துவதற்கான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை” என்று தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “கோயில் நிதியை கல்விக்காக பயன்படுத்தலாம்” என கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மேலும், விளாத்திகுளம், திருச்செங்கோடு ஆகிய இடங்களில் கல்லூரி கட்ட கூடுதல் நிதி தேவைப்பட்டால் அரசின் உதவியை நாடலாம் என தெரிவித்த நீதிபதிகள், மீதமுள்ள கல்லூரிகளை கட்டுவது தொடர்பாக அரசே முடிவெடுத்துக் கொள்ளலாம் எனவும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

கோயில் நிதியில் கல்லூரி கட்ட தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
பாலியல் குற்றச்சாட்டில் கிரிக்கெட் வீரர் அபிஷேக் போரல் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in