தருமபுரி கோயில்களின் ஆக்கிரமிப்புகளை 12 வாரத்தில் அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு

தருமபுரி கோயில்களின் ஆக்கிரமிப்புகளை 12 வாரத்தில் அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: தருமபுரியில் கோயில்களுக்கு சொந்தமான சுமார் ரூ.1,000 கோடி மதிப்புள்ள நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற 12 வாரத்துக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் திருத்தொண்டர் அறக்கட்டளையின் தலைவர் ஏ.ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் மற்றும் புலிக்கரை கிராமங்களில் கோடலம்மன் கோயில், செல்லியம்மன் கோயில், ஈஸ்வரன் கோயில், பெருமாள்சாமி கோயில், திருமலைத்தேவர் கோயில் என்று பல கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களுக்கு ஏராளமான சொத்துகள் உள்ளன.

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயில் சொத்துக்கள் சரிவர பராமரிக்கப்படாமல், தனியார் வசம் உள்ளது. இந்த கோயில் நிலங்களில் சட்டவிரோதமாக கட்டுமானங்கள், ஆக்கிரமிப்புகள் மற்றும் சட்டவிரோதமாக வாடகை வசூல் என்று பல சம்பவங்கள் நடக்கின்றன.

அதிகாரிகள் இந்த சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க நடவடிக்கை எடுப்பது இல்லை. இந்தக் குற்றச் செயல்களை செய்யும் நபர்கள் மீது புகார் செய்தாலும், சிவில் பிரச்சினை என்று கூறி வழக்குப் பதிவு செய்ய காவல் துறை மறுக்கின்றனர். இந்த கோயில் சொத்துகளை மீட்க கடந்த 2023-ம் ஆண்டு முதல் பல கோரிக்கை மனுக்கள் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை. அதனால், இது குறித்து நடவடிக்கை எடுக்க அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு, நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் ராதாகிருஷ்ணன் ஆஜராகி, ‘இந்த கோயில்களுக்கு சொந்தமான சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தில் கடைகள் உள்ளிட்ட பல வணிக நிறுவனங்கள் வாடகைத் தொகை கொடுக்காமல் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளன’ என்றார்.

அறநிலையத் துறை தரப்பில், மனுதாரர் புகார் மனு குறித்து நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கோயில் சொத்துகளை மீட்பது தொடர்பாக 12 வாரத்துக்குள் அறநிலையத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.

தருமபுரி கோயில்களின் ஆக்கிரமிப்புகளை 12 வாரத்தில் அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு
டெல்டாவை பார்வையிட கர்நாடக முதல்வரை கையோடு தமிழகம் அழைத்து வருக: முதல்வருக்கு பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in