திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு
சென்னை: ‘திமுக இளைஞரணி மாநாட்டுக்காக ஏரியில் இருந்து சட்ட விரோதமாக மணல் எடுத்த விவகாரத்தில், திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அவரது மகனுக்கு எதிராக எந்த கடும் நடவடிக்கைகளும் எடுக்கக்கூடாது’ என லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திமுக வடக்கு மண்டல இளைஞரணி மாநாடு கடந்தாண்டு டிச.14 அன்று திருவண்ணாமலையில் நடத்தப்பட்டது. இந்த மாநாட்டுக்காக மலப்பம்பாடி ஏரியில் 12 ஏக்கர் பரப்பில் 10 அடி முதல் 23 அடி ஆழம் வரை சட்டவிரோதமாக மண் எடுக்கப்பட்டதன் மூலம், தமிழக அரசுக்கு ரூ.8 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக, அறப்போர் இயக்கம் சார்பில் கடந்த ஆக.13 அன்று லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அவரது மகன் குமரன் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரியும், விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கக்கோரியும் எ.வ.வேலு மற்றும் அவரது மகன் தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்தது. அதையடுத்து இருவர் தரப்பிலும் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுவுக்கு பதிலளிக்க லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. அதையடுத்து நீதிபதி, இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அவரது மகனுக்கு எதிராக எந்தவித கடுமையான நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என வாய்மொழியாக உத்தரவிட்டார்.
மேலும் இருவருக்கும் முன்ஜாமீன் கோரிய மனுக்களுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை அக்.15-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.