

கோப்புப் படம்
சென்னை: வருமானத்தை கணக்கில் காட்டாதது தொடர்பாக, வருமான வரித் துறை தொடர்ந்த வழக்கில் பதிலளிக்கும்படி, திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திமுக முன்னாள் அமைச்சர் நேருவின் சகோதரர் மணிவண்ணன் நிர்வாக இயக்குநராக உள்ள இரு நிறுவனங்களில் வருமான வரித் துறையினர் கடந்த 2018-ஆம் ஆண்டு சோதனை நடத்தி ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
இந்த ஆவணங்களை, கடந்த 2013-14 முதல் 2015-16 வரையிலான 3 நிதியாண்டுகளில் நேரு தாக்கல் செய்த வருமான வரி கணக்குடன் ஒப்பிட்டுப் பார்த்த வருமான வரித் துறையினர், இந்த காலகட்டத்தில் 17 கோடி ரூபாய் வருமானத்தையும், 11 கோடி ரூபாய் முதலீட்டையும் கணக்கில் காட்டவில்லை எனக் கூறி, அதை கணக்கில் சேர்த்து வருமான வரித் துறை மதிப்பீட்டு அதிகாரி, கடந்த 2019-ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து நேரு தாக்கல் செய்த முறையீட்டை ஏற்று, வருமான வரித் துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.
அந்த உத்தரவை எதிர்த்த வருமான வரித் துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டை விசாரித்த மேல்முறையீட்டு தீர்ப்பாயம், கணக்கில் காட்டவில்லை என கூறப்பட்ட வருமானத்துக்கும், இந்த நிறுவனத்துக்கும் இடையிலான தொடர்பை நிரூபிக்க ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, வருமான வரித் துறையின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து வருமான வரித் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு, மனுவுக்கு 4 வாரங்களில் பதிலளிக்கும்படி முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்துள்ளது.