

மதுரை: சிவகாசியில் பட்டாசு ஆலைகளில் விபத்துகளை தடுப்பது தொடர்பான பரிந்துரைகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவகாசி பட்டாசு ஆலை விபத்து பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை அமர்வு 2014-ல் தாமாக முன்வந்து பதிவுசெய்த வழக்கு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மாவட்ட சட்டப்பணிகள் குழுத் தலைவர் தரப்பில், நீதிமன்ற உத்தரவுபடி ஆக. 6-ல் விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் பரிந்துரைகளை தெரிவித்தனர். விருதுநகர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தரப்பில் பரிந்துரைகள் வழங்கப்படவில்லை எனக் கூறப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், விபத்துகளைத் தடுக்க தேவையான பரிந்துரைகளை ஆட்சியரும், காவல் கண்காணிப்பாளரும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரிடம் வழங்க வேண்டும். அதுகுறித்து ஆணைக்குழு தலைவர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.