

சென்னை உயர் நீதிமன்றம்
கோப்புப்படம்
சென்னை: ஜெம் வீரமணி வழக்கில் கைது செய்யப்பட்ட, ஓட்டுநர் பார்த்திபனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக, ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணிக்கு எதிராக இதுவரை 9 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் பதிவு செய்த ஒரு குற்ற வழக்கில் வீரமணி மற்றும் அவரது ஓட்டுனர்களான பாபு மற்றும் பார்த்திபன் ஆகிய மூன்று பேருக்கு எதிராக, சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி சுமார் 720 பக்கங்கள் கொண்ட குற்றபத்திரிகையை தாக்கல் செய்தது. இதில் 40 பேர் சாட்சிகளாக உள்ளனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பார்த்திபன் தற்போது நீதிமன்ற காவலில் சிறையில் உள்ளார். ஜாமீன் கோரி பார்த்திபன் தாக்கல் செய்த மனுவை, சென்னை போக்சோ நீதிமன்றம் அக்டோபர் 22 ஆம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதையடுத்து, அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அதில், கடந்த அக்டோபர் 5 தேதி தான் கைது செய்யப்படதாகவும், தனக்கும் இந்த வழக்கிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், எனவே தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி என்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கபட்டது. ஜாமீன் வழங்கினால் அவர் சாட்சிகளைக் கலைக்க வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கபட்டது.
இரு தரப்பு வாதங்களுக்கு பிறகு தீர்ப்பை தள்ளிவைத்த நீதிபதி, இன்று தீர்ப்பளித்தார். தற்போதைய நிலையில் ஜாமீன் வழங்க முடியாது என தெரிவித்து பார்த்திபன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.