திண்டுக்கல் மாவட்டத்தில் களம் காணும் 3 வாரிசுகள்: கரை சேரப்போவது யார்?

திண்டுக்கல் மாவட்டத்தில் களம் காணும் 3 வாரிசுகள்: கரை சேரப்போவது யார்?
Updated on
1 min read

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் தொகுதியில் திமுக சார்பிலும், பழநி, வேடசந்தூர் தொகுதிகளில் அதிமுக சார்பிலும் வாரிசுகள் களம் இறக்கப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தமுள்ள 7 தொகுதிகளில் திண்டுக்கல் தொகுதியில் திமுக சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளவர் இ.பெ.செந்தில்குமார்.

இவர், தற்போதைய அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகன் ஆவார். மூன்று முறை பழநி தொகுதியில் போட்டியிட்ட இவர், இரண்டு முறை வெற்றிபெற்றார். ஒருமுறை வெற்றிவாய்ப்பை இழந்தார்.

நான்காவது முறையாக திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடுகிறார். இவருக்கும் அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசனுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

வேடசந்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் களம் இறக்கப்பட்டுள்ளவர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம். இவரது தந்தை வேடசந்தூர் எம்எல்ஏவாக இருந்த வி.பி.பால சுப்பிரமணியன். எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதியான இவர், 1980, 1984 காலகட்டங்களில் இரண்டு முறை எம்எல்ஏவாக இருந்துள்ளார்.

சட்டப்பேரவைத் துணை தலைவர் பதவியும் வகித்துள்ளார். தனது தந்தை வழியில் அதிமுகவில் பயணிக்கும் பரமசிவம் தற்போது மூன்றாவது முறையாக வேடசந்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

முதல் முறை இந்தத் தொகுதியில் வெற்றிபெற்றவர், கடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தார். தற்போது மூன்றாவது முறையாக மீண்டும் வேடசந்தூரில் போட்டியிடுகிறார். இந்தத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சாமிநாதன் இவருக்கு கடும் போட்டியைக் கொடுக்கிறார்.

பழநி தொகுதியில் அதிமுக சார்பில் இரண்டாவது முறையாகப் போட்டியிடுபவர் ரவி மனோகரன். இவரது தந்தை குப்புச்சாமி, எம்ஜிஆர் காலத்தில் ஒட்டன்சத்திரம் எம்எல்ஏவாக 1980, 1984 காலக்கடத்தில் இரண்டு முறை பதவி வகித்தவர்.

ரவி மனோகரனும் தனது தந்தை வழியில் அதிமுகவில் செயல்படத் தொடங்கி கடந்த தேர்தலில் பழநி தொகுதியில் முதன்முறையாகப் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தார். தற்போது இரண்டாவது முறையாக பழநி தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்தமுறை எப்படியும் வெற்றிபெற்றாக வேண்டும் என்ற முனைப்பில் மீண்டும் களம் இறங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இவரை எதிர்த்து திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் பாண்டி நிறுத்தப்பட்டுள்ளார்.

இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் வாரிசுகள் மூன்று பேர் களத்தில் உள்ள நிலையில், இவர்கள் கரைசேர்வார்களா என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

திண்டுக்கல் மாவட்டத்தில் களம் காணும் 3 வாரிசுகள்: கரை சேரப்போவது யார்?
கள்ளக்குறிச்சி தொகுதியை கைப்பற்றுவது யார்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in