

இடம்: ராமநாதபுரம்
படம்: பாலச்சந்தர்
சென்னை: தமிழகத்தில் கோவை, மதுரை, தஞ்சை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் நாளை (மே 8) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சதீவு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி சுமார் 1.5 கிமீ உயரத்தில் நிலவுகிறது.
தெற்கு கேரள கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சதீவு பகுதிகளிலிருந்து தென்மேற்கு மத்திய பிரதேசம் வரை, உள் கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா வழியாக சுமார் 0.9 கிமீ உயரத்தில் ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக நாளை (மே 8) முதல் மே 13-ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை (மே 8) நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.
9, 10 தேதிகளில் மேற்கூறிய மாவட்டங்கள் மற்றும் திருச்சி, நாமக்கல், கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
11-ம் தேதி ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், 12, 13 தேதிகளில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, கடலூர், டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 99 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 82 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும்.
தமிகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் மிமிசல், ஈரோடு மாவட்டம் சிறுவலூரில் தலா 10 செமீ, ஈரோடு மாவட்டம் சவுந்தப்பூரில் 9 செமீ, தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் 8 செமீ, சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில், புதுக்கோட்டை மாவட்டம் அகவயல், கன்னியாகுமரி மாவட்டம் பெருஞ்சாணி அணை, புத்தன் அணை, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், சிவகங்கை, திருநெல்வேலி மாவட்டம் ஊத்து ஆகிய இடங்களில் தலா 7 செமீ மழை பதிவாகியுள்ளது.