

புதுச்சேரி: சட்டப்பேரவைத் தேர்தல் படுதோல்வியடைந்ததால் காங்கிரஸ் மாநிலத் தலைவர் பதவியை எம்பி வைத்திலிங்கம் ராஜினாமா செய்து கடிதம் அனுப்பியுள்ளார்.
புதுச்சேரியில் இண்டியா கூட்டணியில் காங்கிரஸ்- திமுக இடையே தலைமை யார் வகிப்பது என தொடங்கி தொடர் மோதலில் ஈடுபட்டது. காங்கிரஸ் நட்பு போட்டியில் ஈடுபட்டு 22 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு தொகுதியில் மட்டுமே வென்று படுதோல்வி அடைந்தது.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் வைத்திலிங்கம் எம்பி, தட்டாஞ்சாவடி தொகுதியில் ரங்கசாமியை எதிர்த்துப் போட்டியிட்டார். அவர் நான்காம் இடத்தை பிடித்து டெபாசிட் கூட வாங்கவில்லை. இதையடுத்து கட்சியிலும் வைத்திலிங்கத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து வைத்திலிங்கம் காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை வகிக்கக் கூடாது. விலக வேண்டும் என்று கூறி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்விக்கு தார்மிக பொறுப்பு ஏற்று தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக, ராகுல் காந்திக்கு வைத்திலிங்கம் எம்.பி கடிதம் இன்று எழுதியுள்ளார்.