

சென்னை: தமிழகத்தில் சில மாவட்டங்களில் இன்று முதல் மே 27-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும், சென்னை, புறநகரில் இன்று வெப்ப அலை வீசவும் வாய்ப்பு உள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய வங்கக்கடல் பகுதிகளிலிருந்து தமிழகம் வரை தென்மேற்கு வங்கக்கடல் வழியாக சுமார் 3.1 கிமீ முதல் 4.5 கிமீ உயரத்தில் ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று (மே 22) ஓரிரு இடங்களிலும், 23, 24 தேதிகளில் ஒருசில இடங்களிலும், 25 முதல் 27-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் இன்று சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும். 23-ம் தேதி திருவண்ணாமலை, திருச்சி, சேலம், நாமக்கல், வேலூர், திருப்பத்தூர் மற்றும் தருமபுரி மாவட்டங்களிலும், 24-ம் தேதி கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களிலும். 25-ம் தேதி கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, ஈரோடு மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். 26-ம் தேதி கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, ஈரோடு, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களிலும், 27-ம் தேதி கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
உள் தமிழக பகுதிகளில் இன்று முதல் 24-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை வழக்கமான அளவை ஒட்டியே இருக்கும். கடலோர தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் வெப்ப அலை வீசக்கூடும். மாலை அல்லது இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 107 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 86 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும்.
18 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் நேற்று அதிகபட்ச வெப்பநிலை அளவுகளின்படி அதிகபட்சமாக வேலூரில் 108 டிகிரி திருத்தணியில் 107 டிகிரி, சென்னை மீனம்பாக்கத்தில் 106 டிகிரி வெயில் பதிவானது.
ஈரோட்டில் 105 டிகிரி, திருச்சி, கரூர் பரமத்தி, மதுரை மாநகரம், சென்னை நுங்கம்பாக்கத்தில் தலா 104 டிகிரி, மதுரை விமான நிலையத்தில் 103 டிகிரி, தஞ்சாவூர், தருமபுரியில் தலா 102 டிகிரி, பாளையங்கோட்டை, நாமக்கல்லில் தலா 101 டிகிரி, திருப்பத்தூர், சேலம், புதுச்சேரி, பரங்கிப்பேட்டை, கடலூரில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. இவ்வாறு வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.