

சென்னை: முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில், காங்கிரஸ் கட்சியின் ராஜேஷ்குமார், விஸ்வநாதன் உட்பட 23 புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் 59 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ளது.
தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சியமைக்க உரிமை கோரியது. ஆட்சியமைக்கத் தேவையான 118 இடங்களுக்காக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) ஆகிய கட்சிகளின் ஆதரவைப் பெற்றது. முதல்வராக விஜய் கடந்த 10-ம் தேதி பொறுப்பேற்றார். அவருடன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார், ராஜ்மோகன், பிரபு, கீர்த்தனா ஆகிய 9 பேரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். அவர்களுக்கு ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பில், அதிமுகவின் 25 எம்எல்ஏக்களும் ஆதரவு அளிக்க, முதல்வர் விஜய் தலைமையிலான அரசு வெற்றி பெற்றது. சமீபத்தில் அமைச்சர்களுக்கான இலாகா விவரங்கள் அறிவிக்கப்பட்டன. முதல்வர் விஜய் உட்பட 10 அமைச்சர்கள் மட்டுமே பதவியேற்ற நிலையில், அமைச்சரவை விரிவாக்கம் எப்போது என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
தவெக அரசுக்கு முதன்முதலில் ஆதரவு அளித்த காங்கிரஸ் கட்சிக்கு 2 அமைச்சர் பதவிகள் வழங்கப்படுவதாக அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் ஏற்கெனவே அறிவித்திருந்தார். காங்கிரஸ் எம்எல்ஏக்களான செ.ராஜேஷ் குமார், பெ.விஸ்வநாதன் ஆகியோரை அமைச்சரவையில் இணைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில், அமைச்சரவையில் விசிக, 2 கம்யூனிஸ்ட்கள், ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளும் பங்கேற்க வேண்டும் என்று முதல்வர் விஜய் விரும்புவதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார். விசிக, ஐயூஎம்எல் தரப்பும் இதற்கு ஒப்புதல் தெரிவித்தன.
இந்நிலையில், அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுவதாகவும், காங்கிரஸ் கட்சியின் ராஜேஷ்குமார், விஸ்வநாதன் உட்பட 23 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, அமைச்சரவையில் இடம்பெறும் 23 எம்எல்ஏக்கள் பட்டியலை ஆளுநர் மாளிகை நேற்று காலை 9 மணிக்கு வெளியிட்டது. முதல்வர் விஜய் காலை 10 மணிக்கு ஆளுநர் மாளிகைக்கு வந்தார். புதிய அமைச்சர்களை ஆளுநர் அர்லேகருக்கு அவர் அறிமுகம் செய்து வைத்தார்.
இதைத் தொடர்ந்து, வந்தே மாதரம், தேசிய கீதம் அதையடுத்து, தமிழ்த்தாய் வாழ்த்துடன் பதவியேற்பு விழா தொடங்கியது.
தொடர்ந்து, ஸ்ரீநாத் (தூத்துக்குடி), கமலி.எஸ். (அவிநாசி), சி.விஜயலட்சுமி (குமாரபாளையம்), ஆர்.வி.ரஞ்சித்குமார் (காஞ்சிபுரம்), வினோத் (கும்பகோணம்), ராஜீவ் (திருவாடானை), பி.ராஜ்குமார் (கடலூர்), வி.காந்திராஜ் (அரக்கோணம்), மதன் ராஜா.பி (ஓட்டப்பிடாரம்), ஜெகதீஸ்வரி.கே (ராஜபாளையம்), ராஜேஷ்குமார்.எஸ் (கிள்ளியூர்), எம்.விஜய் பாலாஜி (ஈரோடு கிழக்கு), லோகேஷ் தமிழ்ச்செல்வன்.டி (ராசிபுரம்), விஜய் தமிழன் பார்த்திபன்.ஏ (சேலம் தெற்கு), ரமேஷ் (ஸ்ரீரங்கம்), பி.விஸ்வநாதன் (மேலூர்), குமார்.ஆர் (வேளச்சேரி), தென்னரசு.கே (பெரும்புதூர்), வி.சம்பத்குமார் (கோவை வடக்கு), முகமது பர்வேஸ் (அறந்தாங்கி), டி.சரத்குமார் (தாம்பரம்), என்.மரிய வில்சன் (ஆர்.கே.நகர்), விக்னேஷ்.கே (கிணத்துக்கடவு) ஆகிய 23 எம்எல்ஏக்களும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். அவர்களுக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
பின்னர், முதல்வர் உள்ளிட்ட அமைச்சரவைக் குழுவினர் அனைவரும் ஆளுநருடன் குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
விழாவில், சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி.பிரபாகர், தலைமைச் செயலர் சாய்குமார் உள்ளிட்ட அதிகாரிகள், காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர், தேசிய தரவுப் பகுப்பாய்வு பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் தலைவர்கள் கே.வீ.தங்கபாலு, திருநாவுக்கரசர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், விசிக தலைவர் திருமாவளவன், புதிய அமைச்சர்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
செங்கோட்டையன் இலாகா மாற்றம்: நேற்றைய விரிவாக்கத்தின்போது, சிலரது இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளன. இதில், அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனுக்கு நிதித்துறைக்கு பதில், வருவாய்த் துறையும் அமைச்சர் நிர்மல்குமார் வசமிருந்த சட்டப்பேரவை விவகாரங்கள் துறையும் வழங்கப்பட்டுள்ளது. நிதித்துறை மரிய வில்சனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
முதல்வர் விஜய் வசம் முதலில் இருந்த துறைகளில் பெண்கள் நலன் துறைக்கு பதில் சிறப்பு முயற்சிகள் துறையும், அமைச்சர் ஆனந்த் வசம் இருந்த வறுமை ஒழிப்புத் துறையும் சேர்க்கப்பட்டுள்ளன.
ஐயூஎம்எல் சார்பில் ஷாஜகானும், விசிக சார்பில் வன்னி அரசும் இன்று அமைச்சர்களாகப் பதவியேற்கின்றனர். ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா இன்று காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது.
59 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ்: தமிழக அமைச்சரவையில் 59 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் மீண்டும் இடம்பெற்றுள்ளது. கடைசியாக 1967-ல் முதல்வர் பக்தவத்சலம் தலைமையில் திமுகவிடம் ஆட்சியை இழந்த காங்கிரஸ், தற்போது முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவை விரிவாக்கத்தின் மூலம் ஆட்சியில் பங்கேற்றுள்ளது.
இதற்கு முன்பு கடந்த 2006-ல் தனிப்பெரும்பான்மையற்ற திமுக அரசுக்கு காங்கிரஸ் வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு அளித்தது. தற்போது அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற்றதன்மூலம் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி மலர்ந்துள்ளது.