

சென்னை: தமிழகத்தில் நாளை (நவ.27) தேனி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: குமரிக்கடல் பகுதியிலிருந்து தமிழகம் மற்றும் கேரளம் வழியாக தெற்கு உள் கர்நாடகா வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் நாளை (நவ.27) தேனி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, நீலகிரி, கோவை, திருப்பூர், விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
28-ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 18 செமீ, திருச்செந்தூரில் 12 செமீ, நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி, திருநெல்வேலி மாவட்டம் ஊத்து, குலசேகரப்பட்டினம், திருச்சி மாவட்டம் தாயனூரில் தலா 9 செமீ மழை பதிவாகியுள்ளது.