

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே ஆந்திர அரசின் கட்டுப்பாட்டில் உள்ள புல்லூர் தடுப்பணை முழு கொள்ளளவை எட்டி அதன் உபரி நீர் தமிழக பாலாற்றில் இன்று நுழைந்தது. இதையடுத்து, விவசாயிகள், பொதுமக்கள் மலர் தூவி மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சுற்று வட்டாரப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் அவ்வப்போது மழை பெய்து வந்தது. அதேபோல, தமிழக – ஆந்திர எல்லைப்பகுதியிலும் பாலாற்று நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் கனமழை கொட்டி வருகிறது.
இதனால், ஆந்திர எல்லைப்பகுதியான இரட்டை பாலாறு, பெரும்பள்ளம் பகுதிகளில் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளை கடந்து தமிழக – ஆந்திர எல்லையில் உள்ள புல்லூர் பகுதியில் ஆந்திர அரசு ரூ.120 கோடியில் கட்டியுள்ள புல்லூர் தடுப்பணையை கடந்து தமிழக பாலாற்று எல்லைக்குள் இன்று காலை தண்ணீர் வரத்தொடங்கியது.
இந்த தண்ணீரானது ஆவாரங்குப்பம், திம்மாம்பேட்டை, ராமநாயக்கன்பேட்டை, அம்பலூர், கொடையாஞ்சி வழியாக வாணியம்பாடி நோக்கி வர தொடங்கியது. புல்லூர் தடுப்பணையின் முழு கொள்ளளவை கடந்து ஆர்ப்பரித்து கொட்டும் மழை வெள்ளத்தை கண்டதும் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.
புல்லூர் தடுப்பணை நிரம்பி உபரி நீர் வெளியேறுவதை அறிந்த வாணியம்பாடி மற்றும் ஆம்பூரைச் சேர்ந்த பொதுமக்கள் அப்பகுதிக்கு விரைந்து வந்து தடுப்பணையில் இருந்து வெளியேறும் மழை வெள்ளத்தை கண்டு மகிழ்ச்சியடைந்தனர்.
பலர் தங்களது கைபேசியில், தடுப்பணையில் இருந்து வெளியேறும் தண்ணீரை படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து மகிழ்ந்தனர். தமிழக எல்லையில் நுழைந்த தண்ணீர் வாணியம்பாடி அடுத்த ராமநாயக்கன்பேட்டையில் தமிழக அரசு கட்டியுள்ள முதல் தடுப்பணைக்கு நேற்று வந்தடைந்தது.
இந்த ஆண்டில் முதல் முறையாக புல்லூர் தடுப்பணை நிரம்பி உபரி நீர் தமிழக பாலாற்றுப்பகுதிக்குள் வந்துக்கொண்டிருப்பதை அறிந்ததும் பாலாறு பாதுகாப்பு சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் சிவன் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்தனர்.
பிறகு, புல்லூர் தடுப்பணைக்கு வந்து அங்கு பாலாற்று பகுதிக்கு வரும் தண்ணீருக்கு சிறப்பு பூஜைகள் செய்து கற்பூரம் ஏற்றி, மலர்களை தூவி தண்ணீரை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.