

மதுரை: கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க தடை விதிக்கக்கோரி தாக்கலான மனுக்கள் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நாளை விசாரணைக்கு வருகின்றன.
கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கும் விழா கரூரில் நாளை நடைபெறுகிறது. இதில் தமிழக முதல்வர் விஜய் பங்கேற்று அரசு பணி நியமன ஆணைகளை வழங்குகிறார்.
இந்நிலையில் இதற்கு தடை கோரி நாம் தமிழர் கட்சியின் தீரன் திருமுருகன் மற்றும் வழக்கறிஞர் சீனி அகமது ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் முறையிட்டனர். தங்களின் முறையீட்டை அவசர வழக்கமாக விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர்.
இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர். இதையடுத்து தீரன் திருமுருகன், சீனி அகமது ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்தனர்.
மனுக்களில், கரூர் சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையை உச்ச நீதிமன்றம் நியமித்த குழு கண்காணித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவது விசாரணையை பாதிக்கச் செய்யும். இது கரூர் சம்பவத்தின் சாட்சிகளை கலைக்கும் நடவடிக்கையாகும்.
போட்டித் தேர்வு, தகுதி அடிப்படையில் தான் அரசுப் பணி வழங்கப்பட வேண்டும். அதை விடுத்து ஒரு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கினால், இதுபோன்ற சம்பவங்களில் உயிரிழப்பவர்களும் அரசு வேலை கேட்கும் நிலை ஏற்படும்.
தமிழகத்தில் பல்வேறு சம்பவங்களில் மக்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்படவில்லை. இதனால் கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு அரசு வேலை வழங்குவது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும். எனவே சிபிஐ விசாரணை, உச்ச நீதிமன்ற விசாரணை முடியும் வரை அரசு வேலை வழங்க தடை விதித்து உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. இந்த மனுக்கள் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நாளை விசாரணைக்கு வருகிறது.