

முன்னாள் அமைச்சர்கள் தொடங்கி கிளைக் கழக நிர்வாகிகள் வரை அதிமுகவின் பெரும்பாலோனோர் தவெகவில் தஞ்சம் புகுந்துள்ளனர். தவெகவை முற்றிலுமாக அதிமுகவினர் ஆக்கிரமித்து வருவதால், அக்கட்சியின் ‘அசல்’ நிர்வாகிகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
தவெகவில் இப்போது கூட்டம் எங்காவது நடக்குமானால், அங்கு நிற்கும் நபர்களை பார்த்துவிட்டு, அது அதிமுக கூட்டமா, தவெக கூட்டமா என யோசிக்கும் அளவுக்கு, அதிமுகவினர் வேகவேகமாக தவெக பக்கம் தாவி வருகின்றனர். இதனை ஆமோதிப்பது போல அதிமுகவும், தவெகவும் வேறு வேறு இல்லை என அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும் பேசி வருகிறார். இதனால்தான் தவெகவின் பெயரை அஇஅதவெக என மாற்றினாலும் ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை என எதிர்க்கட்சிகள் கிண்டல் அடித்து வருகின்றன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து களம் கண்ட தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றது. 35 சதவீத வாக்குகளை பெற்று, காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக மற்றும் ஐஎம்யூஎல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்றார். தேர்தல் பிரச்சாரத்தின்போது அதிமுகவின் பெயரைக் கூட உச்சரிக்காத விஜய், அக்கட்சியை மற்றும் பலர் என விமர்சித்து வந்தார். ஆனால், தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர், பழனிசாமிக்கு கட்டம் கட்டிய விஜய், வேலுமணி - சி.வி.சண்முகம் தலைமையில் 25 பேரை உடைத்து ஆதரவை வாங்கினார். எப்படியோ பழனிசாமி சுதாரித்துக் கொண்டாலும், இப்போது 6 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டு தவெக பக்கம் தாவியுள்ளனர்.
அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், எம்.பிக்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் உட்பட அனைத்து நிலை பொறுப்பாளர்களும் தவெகவில் இணைந்து வருகின்றனர். இவ்வாறு அதிமுகவிலிருந்து தவெகவுக்கு தாவியவர்கள் பொறுப்புகளை எதிர்பார்த்தே கட்சியில் இணைந்ததாக சொல்லப்படுகிறது.
எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் 4 எம்எல்ஏக்கள் அமைச்சர் கனவில் தவெகவில் இணைந்துள்ளதாக பேசப்படுகிறது. இதேபோல் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏக்கள், முக்கிய நிர்வாகிகள் உள்ளாட்சி தேர்தலில் வலுவான இடத்தை பிடித்துவிட வேண்டும் என்றும் மனக்கோட்டை கட்டுகின்றனர்.
அதிமுகவிலிருந்து தற்போது தவெகவில் தஞ்சம் புகுந்தவர்கள், அனுபவ ரீதியாக மூத்தவர்கள் மட்டுமல்ல, கையில் காசும் வைத்திருப்பவர்கள் என்பது கூடுதல் பலம். அதோடு லோக்கல் செல்வாக்கும் அவர்களுக்கு அதிகம். எனவே, இவர்களது வருகையால் விஜய் ரசிகர் மன்றம் மற்றும் மக்கள் இயக்கத்தில் இருந்து காலம் காலமாக விஜய்க்கு உழைத்து, தவெகவுக்கு முதுகெலும்பாக இருக்கும் தொண்டர்கள், நிர்வாகிகள் கலக்கமடைந்துள்ளனர்.
உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர், மேயர், நகர்மன்ற தலைவர், பேரூராட்சி தலைவர், ஒன்றிய குழுத் தலைவர், ஊராட்சித் தலைவர் மற்றும் கவுன்சிலர் பதவி கனவுடன் இருக்கும் ‘ஆதி கால’ தவெகவினருக்கு அதிமுகவினரின் வருகை பேரிடியாக விழுந்துள்ளது.
ஏனென்றால், உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, மாவட்ட ஊராட்சி, ஒன்றிய ஊராட்சி என கட்சி ரீதியான பதவிகளே 10 ஆயிரத்தை தாண்டும். கட்சி சார்பற்ற தேர்தல் நடக்கும் கிராம ஊராட்சிகளிலும், கட்சிகளின் ஆதிக்கம் இருக்கும். எனவே, அதிகாரமிக்க இந்த ஆயிரக்கணக்கான பதவிகள் தங்களுக்கு கிடைத்தால் கட்சியை வலுப்படுத்த இன்னும் உதவும் என்கின்றனர் பழைய தவெகவினர். அதனால், அதிமுகவிலிருந்து வந்த புது தவெகவினர் தங்களை விழுங்கிவிடுவார்களோ என்று அவர்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
மேலும், இனி மாவட்ட, ஒன்றிய அளவிலான நிர்வாக பொறுப்புகளிலும் அதிமுகவிலிருந்து வந்தவர்கள் பங்கு கேட்க ஆரம்பிப்பார்கள். எனவே, தங்கள் பொறுப்புகள் பறிக்கப்படுமோ என்ற அச்சமும் இப்போதுள்ள தவெக நிர்வாகிகளிடம் உள்ளது. எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்த அதிமுகவினருக்கு அமைச்சர் பதவி கொடுப்பதற்காக, தங்கள் பதவியில் கைவைப்பார்களோ என தவெகவின் சிட்டிங் அமைச்சர்கள் சிலரும் பதற்றத்தில் உள்ளனர்.
இந்த சந்தேகத்தை மேலும் வலுவாக்கும் வகையில், மாற்றுக் கட்சியினர் இணைப்பு விழாவில் பேசிய அமைச்சர் ஆனந்த், புதிதாக வந்தவர்களை ஒதுக்க மாட்டோம் என்று பேசி நம்பிக்கை கொடுத்தார். இதனால் கலக்கமடைந்த சில ‘அசல்’ தவெக நிர்வாகிகள் புஸ்சி ஆனந்தை சந்தித்தனர். அப்போது, “காலம் காலமாக உழைத்தவர்களை கைவிட்டு விடாதீர்கள் அண்ணா’ என சொல்லியுள்ளனர். இதற்கு பதிலளித்த ஆனந்த், ‘நிச்சயமாக யாரையும் கைவிட மாட்டோம்’ என உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.
விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் என்பது ஒவ்வொரு கட்சிக்கும் முக்கியமானது. உள்ளாட்சிகளில் அதிக இடங்களை கைப்பற்றும் கட்சி களத்தில் கோலோச்சும். எனவே, உள்ளாட்சி பதவிகளை பெற்றால் தான் அடுத்தடுத்த கட்டத்துக்கு கட்சியில் வளர முடியும் என ‘அசல்’ தவெகவினர் கணக்குப் போடுகின்றனர். ஆனால், அவர்களின் கனவுக் கோட்டையை தகர்க்கும் வகையில் அதிமுகவினரின் ஆக்கிரமிப்பு தவெகவில் தடதடக்கிறது. இந்தக் கவலை இப்போது தவெகவில் பெரும் புகைச்சலை உருவாக்கியுள்ளது உண்மை.
ஏற்கெனவே அந்தந்த பகுதி மக்களிடம் அறிமுகமான, பணபலம் மிக்க அதிமுக முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏ – எம்.பிக்கள் கட்சியில் இணைவதால், தங்களால் இனி வளர முடியுமா என தவெகவின் மாவட்ட, ஒன்றிய செயலாளர்களும் கவலையில் உள்ளனர்.
இந்த அதிருப்தியை சரிகட்டும் வகையில், முதல்வர் விஜய் கட்சிப் பொறுப்புகளை கவனமாக வழங்க வேண்டும் என்கின்றனர் ‘அசல்’ தவெகவினர். ஒருவேளை இதில் சற்று பிசகல் ஏற்பட்டாலும், தவெகவில் ‘அதிமுக அணி’, ‘அசல் தவெக அணி’ என இரண்டாக நிர்வாகிகள் பிளவுபடவும் வாய்ப்புள்ளதாக சொல்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.