

செங்கல்பட்டு: முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்டுள்ள வழக்கின் விசாரணையை ஆக. 13-ம் தேதிக்கு செங்கல்பட்டு மாவட்ட முதன்மை நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 2006 முதல் 2011-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தா.மோ. அன்பரசன் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது, வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளை குவித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து, முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன், அவரது மனைவி தமிழ்ச்செல்வி, மகன் தமிழ்மாறன் ஆகியோர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு செங்கல்பட்டு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.
இந்த வழக்கு மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி சந்திரசேகரன் முன்னிலையில், நேற்றுமுன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம் சாட்டப்பட்ட தா.மோ. அன்பரசன், தமிழ்ச்செல்வி, தமிழ்மாறன் ஆகியோர் யாரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
அவர்களது தரப்பு வழக்கறிஞரும் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, வழக்கின் விசாரணையை ஆக.13-ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதனிடையே, ஆன்லைன் மூலம் ஆஜராக அனுமதி கோரி மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத் துறையால் பதிவு செய்யப்பட்ட இந்த சொத்துக்குவிப்பு வழக்கு நீண்ட காலமாக விசாரணை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.