

சென்னை: மாநகராட்சியில் ரூ.1,970 கோடி நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் கவுன்சிலர்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் மாமன்றக் கூட்டத்தில் ஆணையர் ஜி.எஸ்.சமீரன் விளக்கமளித்துள்ளார்.
சென்னை மாநகராட்சியின் ஜூலை மாத மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நேற்று நடைபெற்றது. துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ஜி.எஸ்.சமீரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் வழக்கமாக குறைந்தபட்சம் 80 முதல் 160 தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். ஆனால் இம்மாதம் இதுவரை இல்லாத வகையில் குறைந்த அளவில் மொத்தம் 19 தீர்மானங்கள் மட்டுமே நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது: திமுக உறுப்பினர் பரிதி இளம்சுருதி (99-வது வார்டு): தீனதயாளன் நகர் பகுதியில் மாநகராட்சி நிதியின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட புதிய கழிப்பறை திறப்பு விழாவுக்கு மாமன்ற உறுப்பினரான எனக்கும், மண்டலக் குழு தலைவருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. இது அரசு நெறிமுறைகளை மீறும் செயல். அதேபோல் 2026-27-ம் ஆண்டுக்கான மாமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி இதுவரை ஒதுக்கப்படவில்லை.
பட்ஜெட்டை சார்ந்தது அல்ல
மேயர் பிரியா: மாநகராட்சி சார்பில் நடைபெறும் எந்தவொரு திட்ட திறப்பு விழாவாக இருந்தாலும் சம்பந்தப்பட்ட மாமன்ற உறுப்பினர், மண்டலக் குழு தலைவர்களுக்கு கண்டிப்பாக தகவல் தெரிவிக்கப்பட்டு அழைப்பு விடுக்கப்பட வேண்டும்.
அதேபோல் மாமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி என்பது மாநில அரசின் பட்ஜெட்டை சார்ந்தது அல்ல. உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று இந்த நிதியை விரைந்து விடுவிக்க மாநகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகளுடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
காங்கிரஸ் உறுப்பினர் சுகன்யா செல்வம் (109-வது வார்டு): பராமரிப்புப் பணிகளுக்காக வார்டுகளுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட தலா ரூ.10 லட்சம் எப்போது கிடைக்கும்? மேயர் பிரியா: பரிசீலனையில் உள்ளது.
மண்டலக் குழு தலைவர் வே.ராஜன் (143-வது வார்டு): திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கெல்லாம் பெயர் மாற்றம் செய்வதுதான் ஆட்சியாளர்களின் வேலையாக இருக்கிறதே? மேயர் பிரியா: கடந்த திமுக ஆட்சியின்போது அம்மா உணவகத்தின் பெயர் மாற்றப்படவில்லை.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படம் அகற்றப்படவில்லை. ஆனால் இன்றைக்கு திமுகவின் ஒவ்வொரு திட்டத்துக்கும் பெயர் மாற்றமும், ஸ்டிக்கர் ஒட்டுவதும் தான் நடந்து கொண்டிருக்கிறது. மக்களும் அதை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
ரூ.2 ஆயிரம் கோடி நிலுவை
திமுக உறுப்பினர் அதியமான் (105-வது வார்டு): நகரின் பல்வேறு பகுதிகளில் 40 முதல் 50 அடி உயரத்தில் விதிகளை மீறி பேனர்கள் வைக்கப்படுகின்றன.
இதற்கு ஏதேனும் கட்டுப்பாடு உள்ளதா? மேயர் பிரியா: சென்னை மாநகராட்சியின் தெருக்களிலும், முக்கிய சாலைகளிலும் விதிகளை மீறி வைக்கப்பட்டுள்ள பேனர்களை உடனடியாக அகற்ற அனைத்து மண்டல அதிகாரிகளுக்கும் ஆணையர் உடனடியாக சுற்றறிக்கை அனுப்ப அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு மேயர் பிரியா பதிலளித்தார்.
தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் சமீரன் பேசுகையில், ``சென்னை மாநகராட்சியின் மொத்த நிதி பற்றாக்குறை கடந்த 2022-23-ம் ஆண்டில் ரூ.325 கோடியாகவும், 2023-24-ம் ஆண்டில் ரூ.355 கோடியாகவும், 2024-25-ம் ஆண்டில் ரூ.529 கோடியாகவும் இருந்தது.
இந்நிலையில் 2025-26-ம் நிதியாண்டின் இறுதியில் நிதிப் பற்றாக்குறை ரூ.1,970 கோடியாக பன்மடங்கு உயர்ந்துள்ளது. நிதி நிலையை சரியாக கையாள தீவிர சொத்துவரி, தொழில்வரி வசூல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதேபோல, ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேலான பணம் நிலுவையில் உள்ளது. மேலும் நெருக்கடி தொடர்ந்தால் மேலும் கடன் வாங்கும் நிலை ஏற்படும்.
இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் மாமன்ற உறுப்பினர்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மாமன்ற உறுப்பினர்களுக்கான நிதி ரத்து செய்யப்படவில்லை. அடுத்த 3 மாதங்களில் நிதிச் சூழலை பொருத்து நிதி ஒதுக்கீடு செய்வது குறித்து முடிவு செய்யப்படும்'' என்று விளக்கம் அளித்தார்.