

சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் நேற்று மனநல சேவைகள் மற்றும் மேம்பாடு குறித்த கருத்தரங்கை சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தொடங்கி வைத்தார்.
சுகாதாரத்துறை செயலர் தாரேஸ் அகமது, தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் அனீஷ் சேகர், அரசு மனநல மருத்துவமனை இயக்குநர் மாலையப்பன், பேராசிரியர் மருத்துவர் பூர்ண சந்திரிகா உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர்.
நிகழ்வில் அமைச்சர் அருண்ராஜ் பேசியதாவது: மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் சிகிச்சை என்பது குடும்பத்தினருடைய உண்மையான புரிதலும், அரவணைப்பும் தான்.
உடலில் ஒரு நோய் ஏற்படுவது போல், மூளையில் ஏற்படக்கூடிய சில ரசாயன மாற்றங்களால் சில மனநோய்கள் ஏற்படலாம்.
இதை கண்டறிந்து குணப்படுத்த முடியும். ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் ஒருங்கிணைந்த சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம்.
மனநலப் பிரச்சினைகள் உலகம் முழுவதும் மிகப்பெரிய பொது சுகாதார சவாலாக உருவெடுத்துள்ளன. உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, உலகம் முழுவதும் சுமார் 120 கோடி மக்கள் மனநல கோளாறுகளுடன் வாழ்கின்றனர். அதாவது சுமார் 7 பேரில் ஒருவருக்கு மனநல பாதிப்பு உள்ளது.
மனநல நோயால் பாதிக்கப்பட்டு வாழ்ந்தவர்களின் அனுபவங்கள், அவர்களுடைய குடும்பத்தினர், நண்பர்கள், பாதுகாவலர்கள் மற்றும் சமூக அமைப்புகளிடம் கருத்துக்களை கேட்க இருக்கிறோம்.
மனநல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாவட்ட மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் மனநல ஆலோசனை மற்றும் சிகிச்சைகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.