

திருச்சி: முசிறி அருகே அரசுப் பள்ளியில் மாணவர்களின் முதல் பருவ பாடப் புத்தகங்களை பழைய பேப்பர் வியாபாரியிடம் விற்ற தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
திருச்சி மாவட்டம் முசிறி அருகேயுள்ள தும்பலம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 100-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு முதலாம் பருவத் தேர்வுகள் முடிவடைந்தன. இதையடுத்து, பழைய பேப்பர் வியாபாரியை அண்மையில் பள்ளிக்கு வரவழைத்த தலைமை ஆசிரியை மஞ்சுளா, மாணவர்களின் முதல் பருவத்துக்கான பாடப்புத்தகங்களை விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது.
இதையறிந்த கிராம மக்கள், தலைமை ஆசிரியையிடம் கேட்டதற்கு, பள்ளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள புத்தகங்களால் டெங்கு கொசுக்கள் பரவாமல் இருப்பதற்காக அவற்றை விற்றதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து கிராம மக்கள் அளித்த தகவலின்பேரில் கல்வித் துறை அலுவலர்கள் சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து, தொடக்கக் கல்வி இயக்குநருக்கு நவ.7-ம் தேதி விசாரணை அறிக்கையை அளித்தனர். இந்நிலையில், தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவின் பேரில், தலைமை ஆசிரியை மஞ்சுளாவை பணியிடை நீக்கம் செய்து முசிறி மாவட்டக் கல்வி அலுவலர் மதியழகன் உத்தரவிட்டுள்ளார்.