

சோழர்களின் துறைமுக நகரமாக இருந்த காவேரிப்பூம்பட்டினம் என்னும் பூம்புகார் தொகுதியில் தரங்கம்பாடி டேனிஷ்கோட்டை, தேவாலயங்கள், திருக்கடையூர் அமிர்த கடேஸ்வரர் கோயில், நவக்கி ரகங்களில் கேது பகவான் கோயில் போன்றவை அமைந்துள்ளன.
இந்தத் தொகுதியில், செம்பனார் கோவில் ஒன்றியத்தில் 52 ஊராட்சிகள், குத்தாலம் ஒன்றியத்தில் 45 ஊராட்சிகள், சீர்காழி ஒன்றியத்தில் 3 ஊராட்சிகள் என்று மொத்தம் 100 ஊராட்சிகள் மற்றும் தரங்கம்பாடி பேரூராட்சி ஆகியவை உள்ளன.
மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளில் அதிக வாக்காளர்கள், வாக்குச்சாவடிகளை கொண்ட தொகுதியாக பூம்புகார் உள்ளது. இந்தத் தொகுதியில் விவசாயம், மீன்பிடித் தொழில் பிரதானமாக இருந்து வருகிறது. தரங்கம்பாடி மீன்பிடித் துறைமுகம் மற்றும் சந்திரப்பாடி, சின்னங்குடி, வானகிரி, பூம்புகார் உள்ளிட்ட கடற்கரையோர கிராமங்களில் மீன் வியாபாரம் அதிக அளவில் நடக்கும்.
கடற்கரையோர கிராமங்களை அதிகளவில் உள்ளடக்கிய தொகுதி என்பதால், இந்தப் பகுதிகளில் நிலத்தடிநீர் உப்புநீராக மாறி பல கிராமங்களில் விவசாயம் பாதிப்படைந்து வரும் சூழல் உள்ளது. வன்னியர்கள், பட்டியலின மக்கள் அதிகளவில் வசிக்கின்றனர்.
அடுத்தபடியாக சிறுபான்மையினர், மீனவர்கள், பிற சமூகத்தினர் உள்ளனர். இந்தத் தொகுதியில் இதுவரை நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் அதிகபட்சமாக அதிமுக 6 முறையும், திமுக 4 முறையும், பாமக ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.
கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வேட்பாளர் நிவேதா எம்.முருகன் 96,102 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் எஸ்.பவுன்ராஜ் 92,803 வாக்குகள் பெற்று, 3,299 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
அனல்பறக்கும் பிரச்சாரம் தற்போது இந்தத் தொகுதியில் திமுக சார்பில் தற்போதைய எம்எல்ஏ வான மாவட்டச் செயலாளர் நிவேதா முருகன் மீண்டும் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் கடந்த முறை வெற்றி வாய்ப்பை இழந்த மாவட்டச் செயலாளர் பவுன்ராஜ் மீண்டும் போட்டியிடுகிறார். தவெக சார்பில் விஜயாலயன், நாதக வேட்பாளர் இளையநகுலன் ஆகியோர் களம் காண்கின்றனர்.
இதில், மீண்டும் வெற்றியை தக்க வைக்க திமுக வேட்பாளர் நிவேதா முருகனும், கடந்த முறை குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கை நழுவியதால், இந்த முறை வெற்றி பெற்றே தீருவது என அதிமுக வேட்பாளர் பவுன்ராஜும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல, நாதக, தவெக வேட்பாளர்களும் களம் இறங்கியுள்ளனர். இந்தத் தொகுதியில் திமுக- அதிமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது.
மக்களின் எதிர்பார்ப்புகள்
* மயிலாடுதுறை- தரங்கம்பாடி ரயில் சேவை மீண்டும் தொடங்க வேண்டும்.
* மயிலாடுதுறை புதை சாக்கடை கழிவுநீர் சத்தியவான் வாய்க்காலில் விடப்படுவதால் பல கிராமங்களில் சுகாதார சீர்கேடு, நிலத்தடிநீர் மாசுபடுவதை தடுக்க வேண்டும்.
* கடற்கரையோர கிராமங்களில் மண் அரிப்பு ஏற்படுவதை தடுக்க கருங்கல் தடுப்புகள் அமைக்க வேண்டும்.
* கடற்கரையோர கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வர வேண்டும்.
* குத்தாலம் அரசு கலைக் கல்லூரிக்கு நிரந்தர கட்டிடம் கட்ட வேண்டும்.
* மீன் பதப்படுத்தி மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதற்கான தொழில் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.
இதுவரை வென்றவர்கள்
1977 - எஸ்.கணேசன் - திமுக
1980 - என்.விஜயபாலன் - அதிமுக
1984 - என்.விஜயபாலன் - அதிமுக
1989 - எம்.முகமதுசித்திக் - திமுக
1991 - எம்.பூராசாமி - அதிமுக
1996 - ஜி.மோகன்தாசன் - திமுக
2001 - என்.ரங்கநாதன் - அதிமுக
2006 - கே.பெரியசாமி - பாமக
2011 - எஸ்.பவுன்ராஜ் - அதிமுக
2016 - எஸ்.பவுன்ராஜ் - அதிமுக
2021 - நிவேதா எம்.முருகன் - திமுக
வாக்காளர்கள் எண்ணிக்கை
ஆண்கள் - 1,27,071
பெண்கள் - 1,30,050
மூன்றாம் பாலினத்தவர் - 8
மொத்தம் - 2,57,129