

சென்னை மாவட்டத்தின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள தொகுதி தி.நகர் எனப்படும் தியாகராய நகர் தொகுதி. சென்னை மாநகரின் இதயப் பகுதியாகவும் முக்கிய வணிக மையமாகவும் திகழ்கிறது தி.நகர்.
கோடம்பாக்கம், மேற்கு மாம்பலம், அசோக் நகர், கே.கே.நகர், எம்ஜிஆர் நகர், வட பழனி ஆகிய முக்கிய பகுதிகளை இத்தொகுதி உள்ளடக்கி உள்ளது. முதன்மை வணிக மையமாகவும் அதோடு மக்கள் நெருக்கம் மிகுந்த குடியிருப்பு பகுதியாகவும் திகழ்கிறது தி.நகர்.
பிரதானமான கடைகள், ரங்கநாதன் தெரு, சிவா-விஷ்ணு கோயில், பனகல் பூங்கா, பாண்டி பஜார், வெங்கடநாராயணா சாலை போன்றவை முக்கிய அடையாளங்களாக உள்ளன.
தி.நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நாடார், முதலியார், நாயுடு, வன்னியர், பிராமணர்கள், தலித்கள் என அனைத்து சமூக மக்களும் வசிக்கின்றனர்.
தொகுதியில் நிலவும் பிரச்சினைகள்
எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் தி.நகரின் பிரதான பிரச்சினையாக இருப்பது போக்குவரத்து நெரிசல்தான். எத்தனை பாலங்கள் கட்டப்பட்டாலும் போக்குவரத்து பிரச்சினை இன்னும் தீர்ந்தபாடில்லை.
பேருந்துகள் மற்றும் மின்சார ரயில்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லக்கூடிய இப்பகுதியில் தேவையான கழிப்பறை வசதிகள் இன்மை, வாகனங்களுக்கு போதுமான பார்க்கிங் வசதி இல்லாதது, மழைக்காலத்தில் சுரங்கப்பாதைகளில் குளம்போல் தண்ணீர் தேங்குவது, தினமும் டன் கணக்கில் தேங்கும் குப்பைகள், ஆயிரக்கணக்கான வாகனங்களின் இயக்கத்தால் உருவாகும் காற்று மாசுபாடு என பல்வேறு பிரச்சினைகளை மக்கள் சந்தித்து வருகின்றனர்.
வேட்பாளர்கள் பின்புலம்
கடந்த 1957 தொடங்கி இதுவரை நடைபெற்ற 15 தேர்தல்களில் அதிகபட்சமாக திமுக 6 முறையும், அதிமுக 4 முறையும், காங்கிரஸ் 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த 2021 தேர்தலில் திமுக வேட்பாளராக மறைந்த ஜெ.அன்பழகனின் சகோதரர் ஜெ.கருணாநிதி வெற்றிபெற்று எம்எல்ஏ ஆனார்.
அத்தேர்தலில் அவர் 56 ஆயிரத்து 35 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் தி.நகர் சத்யா 55 ஆயிரத்து 898 வாக்குகளும் பெற்றனர். 137 வாக்குகள் மட்டுமே கூடுதலாகப் பெற்று ஜெ.கருணாநிதி வெற்றி பெற்றார்.
தற்போது அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு. ஜெ.அன்பழகனின் மகன் ராஜா அன்பழகனுக்கு போட்டியிட சீட் வழங்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் கடந்த தேர்தலில் தோல்வியடைந்த தி.நகர் சத்யா, நாம் தமிழர் கட்சி சார்பில் அனுஷா விஜய குமார், தவெக சார்பில் எஸ்.ஆனந்த் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இத்தொகுதியில் திமுக - அதிமுக ஆகிய இரு கட்சிகளும் சமபலத்துடன் இருப்பதாகவே அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். கடந்த முறை நூலிழையில் வெற்றிவாய்ப்பை இழந்த சத்யா, கூட்டணி கட்சிகளின் பலத்தால் இந்தமுறை வெற்றி பெற்று விடலாம் என கணக்குப் போடுகிறார்.
அதேநேரம் புதிய வரவான தவெக வேட்பாளர், எந்தக் கட்சியின் வாக்குகளைப் பிரிக்கிறார் என்பதைப் பொறுத்தே வெற்றியைத் தீர்மானிக்க முடியும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த முறையும் திமுக - அதிமுக இடையே போட்டி கடுமையாக இருக்கும்.
எந்தக்கட்சி வென்றாலும் வாக்கு வித்தியாசம் மிகவும் குறைவாகவே இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. வெற்றியை தம் வசமாக்க இரு கட்சியினரும் தீயாய் வேலை செய்து வருகின்றனர்.
வாக்காளர்கள் விவரம்
ஆண் - 74,682
பெண் - 80,228
மூன்றாம் பாலினத்தவர் - 33
மொத்த வாக்காளர்கள் - 1,54,943