பாபநாசம் தொகுதியில் பரிணமிக்கப் போவது யார்?

பாபநாசம் தொகுதியில் பரிணமிக்கப் போவது யார்?
Updated on
2 min read

புகழ்பெற்ற திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை அம்மன் கோயில், ராமர் வழிபட்ட சிவாலயங்கள், தேவாலயங்கள், மசூதிகளை கொண்டது பாபநாசம் தொகுதி. இந்தத் தொகுதியில் கரும்பு, வாழை, பூ, வெற்றிலை, கொப்பரை தேங்காய், நெல் சாகுபடி பிரதானமானதாகும்.

இந்தத் தொகுதியில் பட்டியலின மக்கள், வன்னியர், மூப்பனார், உடையார், முக்குலத்தோர் என அனைத்து சமூகத்தினரும் பரவலாக வசித்து வருகிறார்கள். அதேபோல முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் வசித்து வருகிறார்கள்.

இந்த தொகுதி பெரும்பாலும் திமுகவில் கூட்டணி கட்சிகளுக்கே ஒதுக்கப்படுகிறது. இங்கு இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸ் 8 முறை, அதிமுக 3 முறை, தமாகா 2 முறை, திமுக, மமக, சுயேச்சை தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளன. 1957 முதல் 1991 வரை(1971 தவிர) இந்தத் தொகுதியில் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்று வந்தது.

மறைந்த மூத்த காங்கிரஸ் தலைவரான ஜி.கே.மூப்பனாரின் சொந்த ஊரான இந்தத் தொகுதியில், அவர் தொடங்கிய தமாகா 2 முறை வெற்றி பெற்றுள்ளது. 1971-க்குப் பிறகு இந்தத் தொகுதியில் திமுக வெற்றி பெற்றது இல்லை.

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட ஜவாஹிருல்லா 86,567    வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கோபிநாதன் 70,294 வாக்குகள் பெற்று 16,273 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

இதேபோல, அமமுக வேட்பாளர் ரங்கசாமி 19,778 வாக்குகளும், நாதக வேட்பாளர் கிருஷ்ணகுமார் 14,724 வாக்குகளும் பெற்றனர். இந்த முறை இந்தத் தொகுதி திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்) கட்சிக்கு ஒதுக்கப்பட்டு, ஷாஜகான் போட்டியிடுகிறார்.

இதேபோல, அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் துரைக்கண்ணு மகன் துரை சண்முகபிரபு, நாதக சார்பில் அனீஸ் பாத்திமா, தவெக சார்பில் அசாருதீன் உள்ளிட்டோர் களம் காண்கின்றனர். இங்கு ஐயுஎம்எல் வேட்பாளர் ஷாஜகான், திமுக அரசின் திட்டங்களை எடுத்துக் கூறி வாக்குச் சேகரித்து வருகிறார்.

அதிமுக வேட்பாளர் சண்முகபிரபு, தனது தந்தையும், முன்னாள் அமைச்சருமான துரைக்கண்ணு பதவியில் இருந்தபோது மேற்கொண்ட பணிகளை எடுத்துக் கூறி பிரச்சாரம் செய்து வருகிறார். இதேபோல, நாதக, தவெக வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

கடந்த தேர்தலில் அதிமுக 16,273 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்த நிலையில், அந்தத் தேர்தலில் அமமுக சுமார் 20 ஆயிரம் வாக்குகளை பெற்றுள்ளது. தற்போது அதிமுக கூட்டணியில் அமமுகவும் உள்ளதால், அந்த வாக்குகள் தமக்கு கிடைக்கும் என்பதால் எப்படியும் வெற்றி பெறலாம் என அதிமுக வேட்பாளர் உற்சாகமாக வலம் வருகிறார்.

அதேபோல, சிறுபான்மையினர் வாக்குகள் கணிசமாக கிடைக்கும் என்றும், திமுக அரசின் திட்டங்களாலும் வெற்றி எளிதாக இருக்கும் என ஐயுஎம்எல் வேட்பாளரும் நம்பிக்கையுடன் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த இரு கட்சிகளிடையே போட்டி கடுமையாக உள்ளது. யார் வெற்றி பெறுவார் என்பதை கணிக்க முடியாத நிலை உள்ளது.

தொகுதி மக்களின் எதிர்பார்ப்புகள்

* 40 ஆண்டுகால கோரிக்கையான அரசு கல்லூரி அமைக்க வேண்டும்.

* தஞ்சாவூர்-கும்பகோணம் பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கொள்ளிடம் தென்கரை சாலையை அகலப்படுத்தி பலப்படுத்த வேண்டும்.

* அரியலூர் மாவட்டம் மேலராமநல்லூர்- தஞ்சாவூர் மாவட்டம் கருப்பூர் இடையே கொள்ளிடம் ஆற்றில் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும்.

* இப்பகுதியில் பூக்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுவதால் வாசனை திரவியம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க வேண்டும்.

* ராஜகிரியில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அமைக்க வேண்டும்.

* திருமண்டங்குடி சர்க்கரை ஆலை பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும்.

* நெல் சேமிப்புக் கிடங்கு அமைக்க வேண்டும்.

இதுவரை வென்றவர்கள்

  • 1952 - சுவயம் பிரகாசம் - சுயேச்சை

  • 1957 - வெங்கடாசல நாட்டார், சுப்பிரமணியம் - காங்கிரஸ்

  • 1962 - சுப்பிரமணியன் - காங்கிரஸ்

  • 1967 - சவுந்தரராஜ - மூப்பனார் காங்கிரஸ்

  • 1971 - கணபதி - திமுக

  • 1977 - சவுந்தரராஜன் - காங்கிரஸ்

  • 1980 - ராஜாராமன் - காங்கிரஸ்

  • 1984 - ராஜாராமன் - காங்கிரஸ்

  • 1989 - ஜி.கே.மூப்பனார் - காங்கிரஸ்

  • 1991 - ராஜாராமன் - காங்கிரஸ்

  • 1996 - ராம்குமார் - தமாகா

  • 2001 - ராம்குமார் - தமாகா

  • 2006 - துரைக்கண்ணு - அதிமுக

  • 2011 - துரைக்கண்ணு - அதிமுக

  • 2016 - துரைக்கண்ணு - அதிமுக

  • 2021 - ஜவாஹிருல்லா - மமக

வாக்காளர்கள் எண்ணிக்கை

  • ஆண்கள் - 1,23,838

  • பெண்கள் - 1,30,791

  • மூன்றாம் பாலினத்தவர் - 23

  • மொத்தம் - 2,54,652

பாபநாசம் தொகுதியில் பரிணமிக்கப் போவது யார்?
விக்கிரவாண்டி தொகுதியில் வீறுகொண்டு எழப்போவது யார்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in