விக்கிரவாண்டி தொகுதியில் வீறுகொண்டு எழப்போவது யார்?

விக்கிரவாண்டி தொகுதியில்  வீறுகொண்டு எழப்போவது யார்?
Updated on
3 min read

விழுப்புரம்: ஆன்மிகம் மற்றும் வரலாற்று சுவடுகளை கொண்டது விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி. பாடல் பெற்ற பனையபுரம் பனங்காட்டீஸ்வரர், திருவாமாத்தூர் அபிராமேஸ்வரர் போன்ற சிவாலயங்கள் நிறைந்துள்ளன. மேலும் மண்டகப்பட்டு குடைவரை, எண்ணாயிரத்தில் சமண படுக்கைகள், சமண குகைகள், திருத்தங்கரர் சிற்பங்களை அதிகம் காணலாம்.

விக்கிரவாண்டி எனும் ஊரின் பெயருக்கு வெற்றி கொண்டவர் என்ற பொருளாகவும் கருதப்படுகிறது. விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர். அரிசி ஆலைகள் பரவலாக இருப்பதால் வாணிப களத்திலும் முக்கிய பங்காற்றுகிறது. விக்கிரவாண்டி பேரூராட்சி 100-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளை உள்ளடக்கியது.

சென்னை மாகாணமாக இருந்த காலத்தில் 1952-ல் தேர்தலை சந்தித்துள்ள பெருமை விக்கிரவாண்டிக்கு உள்ளது. உழைப்பாளர் கட்சியைச் சேர்ந்த ஏ.கோவிந்தசாமி முதன் முறையாக வெற்றி பெற்றார். தொகுதி சீரமைப்புக்கு பிறகு வளவனூர் சட்டப்பேரவைத் தொகுதி உருவாகி 1957 மற்றும் 1962-ல் தேர்தலை சந்தித்துள்ளது.

1957-ல் மீண்டும் கோவிந்தசாமி வெற்றி பெற, 1962-ல் காங்கிரஸ் கட்சியைசேர்ந்த கிருஷ்ண கவுண்டர் வெற்றி பெற்றுள்ளார். பின்னர், 2-வது முறையாக தொகுதி சீரமைப்பை சந்தித்தபோது கண்டமங்கலம் தொகுதியாக மாற்றப்பட்டு, பட்டியலின மக்களுக்காக ஒதுக்கப்பட்டது. 10 தேர்தல்களை சந்தித்த இத்தொகுதியில் தலா 5 முறை திமுக, அதிமுக வெற்றி பெற்றுள்ளது.

3-வது முறையாக நடைபெற்ற தொகுதி சீரமைப்பில் விக்கிரவாண்டி தொகுதியாக மீண்டும் மாற்றப்பட்டு 2011 முதல் தேர்தலை சந்தித்து வருகிறது. 2011-ல் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ராமமூர்த்தி வெற்றி பெற்றார். 2016-ல் வெற்றி பெற்ற திமுகவைச் சேர்ந்த ராதாமணி உடல் நலக்குறைவால் உயிரிழக்க, 2019-ல் இடைத்தேர்தலை சந்தித்தது. அப்போது ஆளுங்கட்சியான அதிமுகவைச் சேர்ந்த முத்தமிழ்செல்வன் வெற்றி பெற்றார்.

2021-ல் வெற்றி பெற்ற திமுகவைச் சேர்ந்த புகழேந்தியும் உடல் நலக்குறைவால் உயிரிழக்க, 2024-ல் 2-வது இடைத்தேர்தலை சந்தித்தது. இதில் ஆளுங் கட்சியான திமுகவைச் சேர்ந்த அன்னியூர் சிவா வெற்றி பெற்றார். இப்படியாக இரண்டு இடைத் தேர்தலை சந்தித்ததால் விக்கிரவாண்டி தொகுதி மீது மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

2011-ல் வாக்குப்பதிவுக்கு முன்பாக விக்கிரவாண்டி பேரூராட்சி தலைவர் அர்ஜுனன், துணைத் தலைவர் அழகு ஆகியோர் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். உயிர்பலி கொடுக்கப்பட்டதால் 2011-16 காலகட்டத்தில் இடைத்தேர்தலை சந்திக்கவில்லை என்கின்றனர் தொகுதி மக்கள். இந்த அவநம்பிக்கைக்கு எதிர்காலம் முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாகும்.

விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட முண்டியம்பாக்கம் சர்க்கரை ஆலை, பலரது வாழ்வில் ஒளி விளக்காக இருக்கிறது. ரயில் நிலையத்தில் சரக்கு கையாளும் மையம் செயல்படுவதால் கூலி தொழிலாளர்களுக்கு கைக்கொடுக்கிறது. முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனை நேரடியாகவும், மறைமுகமாகவும் மக்களுக்கு பயன் தருகிறது.

அன்னியூரில் அரசு கலைக் கல்லூரி மற்றும் தனியார் கல்லூரிகள் உள்ளதால் உயர் கல்விக்கும் வழி வகுக்கிறது. விவசாய பூமி என்பதால் வேளாண்மை கல்லூரி தொடங்க வேண்டும் என்பது மக்களின் முதன்மையான கோரிக்கையாக உள்ளது. இதேபோல் அரசு பள்ளிகளின் தரம் உயர்த்த வேண்டும், போதிய வகுப்பறைகள், கழிப்பறை கட்டிடம் கட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்புகளும் தொடர்கிறது.

விக்கிர வாண்டியை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா தொடங்கிய பிறகு மெல்ல வளர்ச்சியை நோக்கி பயனிக்கிறது. தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி பெரும்பாலான ஊர்கள் இருப்பதால் நிலத்தின் மதிப்பும் உயர்ந்துள்ளது.

அதேநேரத்தில் நீர் மேலாண்மையில் பின்தங்கி இருக்கிறது மழையை நம்பிவாழும் பூமி. நூற்றாண்டை கடந்த கால்வாய் திட்டத்துக்கு அன்னியூர் சிவா எம்எல்ஏ புத்துயிர் அளித்திருந்தாலும் முழுமை பெறும் வரை மக்களுக்கு கானல் நீராகவே இருக்கும். பம்பை கால்வாயில் தடுப்பனை கட்ட வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.

வேலை வாய்ப்புக்காக சென்னை, பெங்களூரு, கோவை, மும்பை போன்ற இடங்களுக்கு இளைஞர்கள் புலம் பெயர்ந்து வருகின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, புதிய தொழிற் சாலைகள் தொடங்க வேண்டும். நெல்லுக்கு அடுத்தபடியாக சவுக்கு சாகுபடியும் இருப்பதால் காகித தொழிற்சாலையை அரசு தொடங்க முன்வர வேண்டும். ஐடிஐ, பாலிடெக்னிக் தொடங்கி இளைஞர்களுக்கு தொழிற்கல்வி அளிக்க வேண்டும்.

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் பற்றாகுறைக்கு தீர்வு காண வேண்டும். விக்கிரவாண்டி மற்றும் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு சென்றுவர அன்னியூர், நல்லாபாளையம், கண்டாச்சிபுரம், கடையம், லட்சுமிபுரம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து அரசு பேருந்து சேவையை தொடங்க வேண்டும்.

மேலும் தொலை தூரங்களில்இருந்து இயக்கப்படும் அரசு பேருந்துகளை, விக்கிரவாண்டியில் நிறுத்த வேண்டும். கெடாரில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் மற்றும் சூரப்பட்டில் உழவர் சந்தை தொடங்க வேண்டும். நீர்நிலைகளில் உள்ளஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, ஏரிகளை தூர்வார வேண்டும். பம்பை கால்வாய், வராக நதியை பாதுகாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளும் உள்ளன.

விக்கிரவாண்டி தொகுதியில் 24 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சிவக்குமார், நாதகசுபா, தவெக விஜய் வடிவேல் ஆகியோரது களப்பணி தீவிரமடைந்துள்ளது.

இடைத்தேர்தலில் வெற்றி பெற்று ஒன்றரை ஆண்டில், ‘நந்தன் கால்வாய் திட்டத்துக்கு ரூ.470 கோடி நிதியை பெற்று தந்தது, திருவண்ணாமலை மாவட்டத்தில் தென்பெண்ணையாறு துரிஞ்சலாற்றை இணைப்பதற்காக நிலம் கையகப்படுத்த நிதியை பெற்று தந்தது, அன்னியூரில் அரசு கலைக்கல்லூரியை கொண்டு வந்தது, மண்டகப்பட்டில் தொழிற்பேட்டை அமைக்கநிலம் ஒதுக்கீட்டுக்கு அரசாணை பெற்றது, ஒரத்தூர் சாலையில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை, புதிதாக கஞ்சனூர் ஒன்றியத்தை கொண்டு வந்தது, விக்கிரவாண்டியில் உழவர் சந்தை, இறைச்சி அங்காடி, சமுதாய கூடம் கொண்டு வந்தது, பம்பையாற்றில் அகழாய்வு பணிகளை தொடங்கியது என தான் செய்த சாதகனைகளை முன்வைத்தும், திராவிட மாடல் அரசின் திட்டங்கள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துரைத்து மக்களை சந்தித்து வருகிறார் திமுக எம்எல்ஏ அன்னியூர்சிவா.

மேலும் திமுக வேட்பாளருக்கு கூட்டணி பலமும் முக்கியத்துவம் பெறுகிறது. விசிக, இடதுசாரிகளுக்கு கணிசமாக வாக்கு வங்கிகள் உள்ளன. அதிகம் வசிக்கக்கூடிய பட்டியலின மக்கள் மற்றும் கணிசமாக வசிக்கும் இஸ்லாமியர்கள், சிறுபான்மையினர் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கை, திமுக வேட்பாளருக்கு உள்ளது. வன்னியர் சமூகத்தைச் சார்ந்தவர் என்பதால் அவர்களது வாக்குகளை பெறுவதிலும் கவனமாக இருக்கிறார்.

அதிமுக கூட்டணி சார்பில் பாமக போட்டியிடுகிறது. சுமார் 45 சதவீதம் வன்னியர்கள் நிறைந்த பகுதி என்பதாலும், அதிமுகவின் தேர்தல் அறிக்கையும் தனக்கு கைக்கொடுக்கும் என்ற நம்பிக்கையுடன் பாமக வேட்பாளர் சிவக்குமார் வலம் வருகிறார். அதேநேரத்தில் அதிமுகவினர் தங்களது முழு பங்களிப்பை அளித்தால் மட்டுமே, பாமகவுக்கு வெற்றி சாத்தியம் என்பது கள நிலவரமாகும்.

இலவசங்களை தவிர்ப்போம், குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு என்ற முழக்கத்துடன் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்துகளுடன், அவரது வேட்பாளர் சுபா பிரச்சாரம் செய்கிறார்.

தனித்து களம் காண்பது, முதல் முறை தேர்தலை சந்திப்பது, திமுக மற்றும் அதிமுகவுக்கு மாற்று என்ற அடையாளத்துடன் தேர்தலை சந்திக்கும் தவெக தலைவர் விஜய் என்ற ஒற்றைதிரை நட்சத்திர அடையாளத்துடன் அக்கட்சியின் வேட்பாளர் விஜய் வடிவேல் சுறுசுறுப்பாக சூழல்கிறார். இருப்பினும் திமுக, பாமக இடையே தான் நேரடி போட்டி நிலவுகிறது.

வாக்காளர்கள் விவரம்

ஆண் - 1,12,050

பெண் - 1,15,276

மூன்றாம் பாலினத்தவர் - 29

மொத்த வாக்காளர்கள் - 2,27,355

விக்கிரவாண்டி தொகுதியில்  வீறுகொண்டு எழப்போவது யார்?
தூத்துக்குடி தொகுதியில் கெத்து காட்டப்போவது யார்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in