

தமிழக சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 53-வது இடத்தில் கிருஷ்ணகிரி தொகுதி உள்ளது. இந்தியாவில் மிக நீளமான காஷ்மீர் - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை இத்தொகுதி வழியாகச் செல்கிறது. மேலும், 4 தேசிய நெடுஞ்சாலைகள் சந்திக்கும் இடமாக கிருஷ்ணகிரி நகரம் உள்ளது.
கிருஷ்ணகிரி பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளை கொண்டது. இங்குள்ள, ‘பாராமகால்’ என அழைக்கப்பட்ட 12 கோட்டைத் தலங்கள் வரலாற்று முக்கியத்துவம் பெற்றது. இதில் முதன்மையான கிருஷ்ணகிரி மலைக்கோட்டை இத்தொகுதியின் அடையாளமாக உள்ளது.
இத்தொகுதியில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உள்ள கிருஷ்ணகிரி அணையின் மூலம் 2-ம் போக நெல் சாகுபடியும், மல்லிகை, மா, தென்னை சாகுபடியில் விவசாயிகள் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், உருது மொழி பேசும் மக்கள் வசிக்கின்றனர். கிருஷ்ணகிரி நகராட்சி, காவேரிப்பட்டணம் பேரூராட்சி, கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 40 ஊராட்சிகள் இத் தொகுதியில் உள்ளடங்கியுள்ளன.
இத்தொகுதியில் வன்னியர், வெள்ளாள கவுண்டர், பட்டியலின மக்கள் அதிகளவில் உள்ளனர். இதேபோல இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களும் பரவலாக உள்ளனர்.
தொகுதியில் நிலவும் பிரச்சினைகள்
மாவட்டத்தின் தலைநகராக கிருஷ்ணகிரி நகரம் இருந்தாலும், அடிப்படை கட்டமைப்பு வசதிகளில் பின்தங்கியுள்ளன. குறிப்பாக, பாதுகாப்பான குடிநீர், பொது கழிப்பறை வசதிகள் இல்லை. நகரில் காய்கறி சந்தைக்கு தனி இடம் வேண்டும். கிருஷ்ணகிரியில் அரசு சட்டக்கல்லூரி ஏற்படுத்த வேண்டும்.
காவேரிப்பட்டணத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண் டும் என்பன பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. தென்பெண்ணை ஆற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க சுத்திகரிப்பு நிலையம், எண்ணேகொல்புதூர் கால்வாய் திட்டப்பணியை விரைந்து முடிக்க வேண்டும்.
மா ஏற்றுமதி மண்டலம், கிருஷ்ணகிரியில் புளி ஏல மையம், புளி குளிர்பதன கிடங்கு, தக்காளி, மாம்பழக் கூழ் தொழிற்சாலை, வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக உள்ளது.
கிருஷ்ணகிரி சின்ன ஏரியில் பூங்காவுடன் கூடிய படகு இல்லம், அவதானப்பட்டி சிறுவர் பூங்காவில் தீம் பார்க், கிருஷ்ணகிரி அணையில் படகு இல்லம், அணை பூங்காவை சுற்றுலா பயணிகளின் வசதிக்காக பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்பன சுற்றுலா ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி இடமாற்றம் செய்தல், கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காண ஈரடுக்கு மேம்பாலம் அமைத்தல், கிருஷ்ணகிரி வழியாக ஓசூருக்கு ரயில் பாதை அமைக்கும் திட்டம் உள்ளிட்டவை இத்தொகுதி மக்களின் நீண்டகால தீராத பிரச்சினையாக உள்ளது.
வேட்பாளர்களின் பின்புலம்
இத்தொகுதி இடைத்தேர்தல்களுடன் சேர்த்து இதுவரை 16 தேர்தல்களை சந்தித்துள்ளன. இதில், 1951-ல் நடந்த தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி வெற்றி பெற்றார். தொடர்ந்து நடைபெற்ற தேர்தல்களில் அதிமுக 7 முறையும், திமுக 6 முறையும், காங்கிரஸ் 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
தற்போதைய தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் எம்பி செல்லக்குமார், அதிமுக சார்பில் சிட்டிங் எம்எல்ஏ அசோக்குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் சுகந்தி பார்த்திபன், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் முகுந்த் பாண்டியன் உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர்.
காங்கிரஸ் வேட்பாளர் செல்லக்குமார், உட்கட்சி நிர்வாகிகளிடம் நிலவிய வெளியூர்காரர் என்ற அதிருப்தி போக்கை மாற்றி திமுக நிர்வாகிகளுடன் ‘கை’ கோர்த்து களப்பணியில் ஈடுபட்டுள்ளார். கிருஷ்ணகிரி மக்களவை தொகுதி உறுப்பினராக ஏற்கெனவே இருந்த நிலையில் மக்களிடம் நன்கு பரிச்சயமாகி உள்ளார்.
எம்பியாக இருந்தபோது செய்த பல்வேறு திட்டங்களை எடுத்துக் கூறியும், திமுக தேர்தல் அறிக்கை மற்றும் திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு திட்டங்களை முன்னிலைப்படுத்தியும் மக்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
அதிமுக வேட்பாளர் அசோக்குமார், ஏற்கெனவே இத்தொகுதி எம்எல்ஏவாக இருப்பதோடு, கட்சியில் மாவட்டச் செயலாளராக இருப்பதால் மக்களிடம் நன்கு பரிச்சயமான உள்ளூர்காரார் என்பது இவருக்கு பலம்.
கடந்த 2021 தேர்தலில் இவர் போட்டியிட்டபோது, உடல் நலம் பாதிக்கப்பட்டு, மக்களை சந்திக்க முடியாத நிலையில், அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினரின் பிரச்சாரத் தால் வெற்றி பெற்றார்.
இம்முறையும் வெற்றியைத் தக்க வைக்க கட்சி நிர்வாகிகள், கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து தொகுதி முழுவதும் 5 ஆண்டுகள் தொகுதிக்கு செய்த திட்டங்கள், கட்சியின் தேர்தல் அறிக்கையை பிரதானப்படுத்தி தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இதேபோல நாதக வேட்பாளர் சுகந்தி பார்த்திபன், கட்சியின் கொள்கைகள், மாற்றத்திற்கான திட்டங்களை கூறியும், தற்சார்பு பொருளாதார கொள்கை குறித்து பிரச்சாரம் செய்தும் மக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார். தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் முகுந்த் பாண்டியன், கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக்கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
இத்தொகுதியில் காங்கிரஸ்-அதிமுக இடையே கடும் போட்டி நிலவும் நிலையில், மக்கள் மனதில், ‘கை’ உள்ளதா அல்லது மீண்டும் துளிர்விடும் ‘இலை’ உள்ளதா என்பது தேர்தல் முடிவில் தெரிந்து விடும்.
வாக்காளர்கள் விவரம்
ஆண் - 1,30,891
பெண் - 1,36,414
மூன்றாம் பாலினத்தவர் - 61
மொத்த வாக்காளர்கள் - 2,67,366